ஜாலி கேலியான ‘விடிவி’!
நடிகர் சிம்புவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்த படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த வார்த்தைகளின் ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டு ‘விடிவி’ என்று சுருக்கமாகச் சொல்லிக் கொண்டாடி வருகிறது ஜென்ஸீ தலைமுறை.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை இது போன்ற காதல் படைப்புகள் திரையுலகை ஆட்டுவிக்கும். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘பன்னீர் புஷ்பங்கள்’ படங்களுக்கு முன்பிருந்தே அந்த வழக்கம் தொடர்கிறது.
அந்த வகையில், 2025இல் இருக்கும் தற்காலச் சூழல், இளைய தலைமுறையின் சிந்தனையோட்டத்தோடு ஒன்றியிருப்பதாக அமைந்திருக்கிறது தெலுங்கு திரைப்படமான ‘லிட்டில் ஹார்ட்ஸ்’. சுமார் இரண்டரை கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம், சுமார் நான்கு நாட்களில் 12 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆக, தெலுங்கு திரையுலகின் ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘குடும்பஸ்தன்’, ‘ட்ராகன்’ ஆகக் கொண்டாடக்கூடிய அளவுக்கு ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக உருவெடுத்திருக்கிறது.
முழுக்கப் புதுமுகங்கள் நிறைந்த இப்படம் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறது?
காதலைத் தவிர ஒன்றுமில்லை..!
பள்ளி, கல்லூரி காலங்களில் பாடப்புத்தகம் சகிதமாக, விளையாட்டு அல்லது கலை சார்ந்த போட்டிகள் தொடர்பாக, தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்ப ‘இன்புளூயன்சராக’ புகழ் பெறுவது குறித்த யோசனைகளோடு வலம் வருகிற இளையோரைக் காணும் நம் கண்களில் எந்நேரமும் எதிர்பாலின ஈர்ப்பைச் சுமந்து நிற்கிறவர்களையும் காண்பது இயல்பு.
எல்லா காலகட்டத்திலும் அதுமாதிரியான மனிதர்கள் உண்டு. அந்த பாலியல் ஈர்ப்பு எப்போது காதலாக மாறியது? எந்த தருணத்தில் சம்பந்தப்பட்டவரை நல்வழிப்படுத்தியது? அந்த மாற்றம் நிகழ்ந்த காலம் எவ்வளவு சுவாரஸ்யமானது என்று சொல்கின்றவை நல்ல ‘காதல் சினிமா’க்களாக இருக்கும்.
அப்படியொரு கதையாக அமைந்துள்ளது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’.
இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத அகில், அவரது தந்தையால் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுகிறார்.
அதற்கு முன்னதாக, நல்லதொரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த அவரது கேர்ள்ப்ரெண்ட் ’டாட்டா பை.. பை..’ என்கிறார். அகில் மொபைல் எண்ணை ‘ப்ளாக்’ செய்கிறார்.
நண்பனோடு சேர்ந்து பயிற்சி வகுப்புக்குச் சென்றாலும், ‘என் மனதைக் கொள்ளையடித்தவளே’ என்று காதல் பாடல் பாடுகிற ‘மூடில்’ இருக்கிறார் அகில். அதற்கேற்ப, அங்கு வரும் காத்யாயனியைச் சந்திக்கிறார்.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காக, அந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருக்கிறார் காத்யாயனி.
சில பல ‘தகிடுதத்தங்கள்’ செய்து, காத்யாயனி உடன் பழகத் தொடங்குகிறார் அகில். ஒருநாள் பார்த்து, தனது காதலையும் சொல்கிறார்.
’என் காதலை ஏத்துக்குவியா மாட்டியா’ என்று கேட்கும் அகிலிடம், ‘எனக்கு உன்னை விட மூணு வயசு ஜாஸ்தி’ என்கிறார் காத்யாயனி. அதன்பிறகு என்னவானது என்பதைச் சில பல திருப்பங்களுடன் சொல்கிறது ‘லிட்டில் ஹார்ட்ஸ்’.
மேற்சொன்னதைக் கேட்டவுடன், ‘இது விடிவி மாதிரியே இருக்குதே’ என்று தோன்றலாம். அந்த ‘வயசு வித்தியாசம்’ தவிர்த்து, இரண்டு படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.
’இந்த படத்தில் காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று சொல்லும் அளவுக்கு ’ரொமான்ஸ்’ நிறைந்திருக்கிறது. அதற்காக, ‘உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு’ வகையறா காட்சிகள் இதில் சுத்தமாகக் கிடையாது.
மாறாக, எல்லா ‘சீரியசான’ காட்சிகளிலும் நாம் சிரித்து வைக்கிற வகையில் ஏதேனும் விஷயம் இருக்கிறது. ஏதேனும் ஒரு பாத்திரம் அல்லது காட்சியின் தன்மை மற்றும் உள்ளடக்கம் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.
அந்த ‘பிரசண்டேஷன்’ தான் இந்த ‘சின்ன பட்ஜெட்’ படத்தைப் பெரிய வெற்றி அடைய வைத்திருக்கிறது.
அழகு ‘காட்சியாக்கம்’!
’லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற டைட்டிலுக்கு ஏற்ப, இதில் வருகிற பாத்திரங்களின் வார்ப்பு நிறைய அடுக்குகள் கொண்டதாக இல்லை. மிக எளிமையானதாக அவை வார்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த வார்ப்பில் கொஞ்சம் கூட குழப்பங்கள் இல்லை. அதுவே இப்படத்தின் பலம்.
இதில் அகில் ஆக மௌலி தனுஜ் பிரசாந்த், காத்யாயனி ஆக ஷிவானி நகரம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
மௌலி இதற்கு முன்னர் இரண்டு தெலுங்கு வெப்சீரிஸ்களில் நடித்திருக்கிறார். அவையிரண்டும் ‘கம்மிங் ஆஃப் ஏக்’ வகையறா கதைகள். அதாகப்பட்டது, பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்து அனுபவங்களைச் சொல்பவை. அதனால், அதே போன்றதொரு நடிப்பைத் தருவதில் அவருக்குச் சிரமங்கள் இல்லை. ரொம்ப ‘நேச்சுரலாக’ அதனை வெளிப்படுத்தியிருப்பது ஒவ்வொரு காட்சியையும் சுவாரஸ்யப்படுத்துகிறது.
பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கும் அளவுக்கு, இதில் மௌலியின் நடிப்பு அமைந்திருக்கிறது.
போலவே, இந்த படத்தின் ‘க்ரவுட் புல்லர்’ ஆக இருக்கிறார் ஷிவானி நகரம். அழகுப் பெட்டகமாக இதில் அவர் தோன்றியிருக்கிறார். ஏற்கனவே ‘அம்பாஜிபேட்ட மேரேஜ் பேண்ட்’ படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதனை மறக்கடிக்கிற அளவுக்கு, இதில் அவரது இருப்பு அமைந்துள்ளது.
ஒவ்வொரு காட்சியிலும் ஷிவானியின் மெருகேறிக்கொண்டே போவதாக எண்ண வைக்கிறார் இயக்குனர். அதுவும் இறுதியாக வரும் பத்து நிமிடக் காட்சிகள், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன.
மௌலி உடன் நண்பர்களாகத் திரியும் ஜெய்கிருஷ்ணா, நிகில் அப்பூரி பேசும் சாதாரண வசனங்களுக்கு கூட தியேட்டரில் சிரிப்பலை பெரிதாகக் கேட்கிறது. ‘சப்டைட்டில்’ இல்லாத காரணத்தால், வசன நகைச்சுவையைப் புரிந்துகொள்ள ’படாத பாடு’ பட வேண்டியிருக்கிறது.
நாயகன், நாயகியோடு சிறு பாத்திரங்களில் தோன்றியிருக்கிற ஷைலஜா துர்வசுலா, பத்மினி செட்டம் இருவருக்கும் சமூகவலைதளங்களில் தனி ‘ரசிகர்’ கூட்டம் உருவாகலாம்..! அந்தளவுக்கு இதில் அவர்களது பாத்திர வார்ப்பு மற்றும் காட்சி அமைப்பு உள்ளது.
மௌலியின் பெற்றோராக நடித்துள்ள ராஜிவ் கனகலா – அனிதா சௌத்ரி, ஷிவானியின் தந்தை தாயாக வரும் எஸ்.எஸ்.காஞ்சி – சத்யா கிருஷ்ணன், கோச்சிங் கிளாஸ் டீச்சராக வருபவர் ஆகியோரும் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
இது போன்ற படங்களில் திரைக்கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு ‘ஷார்ட் பிலிம்’ பார்க்கிற திருப்தியே ஏற்படும். காரணம், படத்தின் பட்ஜெட்.
’லிட்டில் ஹார்ட்ஸ்’ படத்தில் அந்த விஷயமே நம் மனதுக்குள் எழுவதில்லை. அதற்குக் காரணம், ‘பீல்குட்’ உணர்வைத் தருகிற காட்சியாக்கம்.
ஒவ்வொரு பிரேமும் செதுக்கினாற் போல இருக்கும் வகையில் படக்குழு மெனக்கெட்டிருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவாளர் சூரியா பாலாஜி, கலை இயக்குனர் திவ்யா பவன், படத்தொகுப்பாளர் சிதர் சொம்பல்லி, ஒலி வடிவமைப்பாளர் பிரபு சி.எஸ். எனப் பலர் அதன் பின்னிருக்கின்றனர்.
இசையமைப்பாளர் சின்ஜித் யெர்ரமல்லி பின்னணி இசை வழியே குதூகலத்தை ‘அன்லிமிடெட்’ ஆக தந்திருக்கிறார். பாடல்களும் நம்மைச் சட்டென்று வசீகரிக்கின்றன.
இது போகப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது சிரத்தையை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இயக்குனர், நடிகர் நடிகையர் என்று பெரும்பாலும் புதுமுகங்கள் நிறைந்திருக்கிற ‘லிட்டில் ஹார்ட்ஸ்’, திரைக்கு வருவதற்கு முன்னர் எத்தகைய எதிர்பார்ப்பைத் தெலுங்கில் ஏற்படுத்தியது என்று தெரியவில்லை. ஆனால், படம் வெளியானபிறகு ‘இது ஜாலி கேலியான விடிவி’ என்று சொல்லும் வகையில் இப்படம் அமைந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
‘நாடகத்தனமா இருக்குது’, ‘சிரிக்கச் சிரிக்க எடுத்து வச்சிருக்காங்க’, ‘சீரியசா கதை சொல்லவே இல்ல’ என்று பலவிதமாக ‘எதிர்மறை’ விமர்சனங்கள் வரக்கூடிய ஒரு திரைப்படம் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’. ஒவ்வொரு காட்சியும் ஒரு ‘சிறுகதை’ என்ற வகையில் இப்படத்தை ஆக்கியிருந்தால், இந்த படத்தின் திரைக்கதையை எல்லோராலும் ஏற்றிருக்க முடியாது.
அவ்வாறில்லாமல் ஒவ்வொரு பிரேமையும் ஒன்றிணைக்கவும் சீராக்கவும் பெரும் முயற்சி தேவை. அதனைச் சிறப்பாகக் கையாண்டு, ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரும்படியாக ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சாய் மார்த்தாண்ட்.
இனி வரும் படங்களிலும் இப்படியொரு ‘பிரசண்டேஷன்’ இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் இயக்குனரே..!
