சாராய வியாபாரிகளுக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு – ராமதாஸ்

Published On:

| By indhu

Liquor peddlers close links to DMK - Ramadoss

சாராய வியாபாரிகளுக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூன் 20)  குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூன் 20)  தைலாபுரம் தோட்டத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

கள்ளச்சாராயம் குடித்து இத்தனை பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் அரசும், காவல்துறையும் முற்றிலுமாக செயலிழந்துவிட்டன.

கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணத்தில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அதன் பின்னராவது, தமிழக அரசு விழித்துக்கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. இன்று சட்டமன்றம் கூடியதால் எதிர்கட்சிகள் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பும் என்பதை அறிந்த அரசு, இதை மூடி மறைக்க முயன்றது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடிக்கவில்லை என்பது போன்ற கட்டுக்கதைகளை கூறினார்.

ஒருகட்டத்தில், உயிரிழப்புகள் அதிகரித்தப் பின்னர்தான், தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டு மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் சரியானதுதான். ஆனால், அவை போதுமானது அல்ல.

கல்வராயன் மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு, ஆளும் கட்சியின் முழுமையான ஆதரவு இருக்கிறது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சாலையில் சாராய வியாபாரி கோவிந்தராஜ்  பதாகை வைத்துள்ளார்.

அந்த அளவிற்கு சாராய வணிகர்களுக்கும், திமுகவினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கள்ளச்சாராய விற்பனையையும், உயிரிழப்பையும் தடுக்க தவறியதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பதவி விலக வேண்டும்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கு தேவை. டாஸ்மாக் சாராயம், கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற பல்வேறு போதைப் பொருட்களால் தமிழ்நாடு தள்ளாடுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் முழுமையான மதுவிலக்கையே எதிர்பார்க்கிறார்கள்” என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம் : ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவு!

”ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” : எடப்பாடி ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share