கள்ளச்சாராய விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் எங்கும் மது விற்பனை செய்யவும், மது அருந்தவும் தடைவிதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பூரண மதுவிலக்கால் பீகாரில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்களின் புழக்கமும் அதிகரித்தது.
இதனால், ஏராளமானோர் பலியாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவாடா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய ஆறு பேர் பலியாகினர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 14ஆம் தேதி பீகார் மாநிலம், சரண் மாவட்டத்துக்குட்பட்ட சாப்ரா பகுதியில் மது அருந்திய பலர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 60ஐத் தாண்டியிருக்கிறது.
இந்த விவகாரம் ஆளும் நிதிஷ்குமார் அரசுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக இதுகுறித்து பாஜக அதிக விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

நடப்பு பீகார் சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதம் எழுந்தது. அதற்குப் பதிலளித்த, முதல்வர் நிதிஷ்குமார், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.
அப்படியிருந்தும், குடித்து உயிரிழப்பவர்களுக்கு எப்படி இழப்பீடு தர முடியும்? கள்ளச்சாராயம் குடித்தால் மரணமடைவீர்கள், கள்ளச்சாராய விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹரியானா, உத்தரப்பிரதேசம் என எங்கு சென்றாலும் அதே கதைதான். மற்ற இடங்களில் அவர்கள் இறக்கும்போது ஏன் தகவல் வெளிவருவதில்லை… நான் எல்லா இடங்களிலும் மீண்டும் வலியுறுத்துகிறேன்,
யாராவது மதுவுக்கு ஆதரவாகப் பேசினால், அது ஒருபோதும் பயனளிக்காது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இது போன்ற அவலங்கள் நடக்கும்போது ஊடகங்கள் பெரிதாகக் காட்டுகின்றன” எனக் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.
என்றாலும், இந்த விவகாரத்தை பாஜக பெரிதுபடுத்தி நிதீஷ் அரசைக் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரும் நிதீஷை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர், ”நிதீஷ்குமாரைப்போல உணர்வற்ற ஒரு நபரை நான் பார்த்ததில்லை. 2014-15 இல் நிதீஷ் குமாரை முதல்வர் ஆக்குவதற்காக அவருக்கு நான் உதவினேன். ஆனால், தற்போது அதற்காக வருத்தப்படுகிறேன். பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் மத்திய அரசின் ரயில்வே அமைச்சராக நிதிஷ்குமார் இருந்த போது ரயில் விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்துக்கு பொறுப்பேற்று நிதீஷ் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அப்போதைய நிதீஷ்குமாருக்கும், தற்போதைய நிதீஷ்குமாருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கள்ளச்சாராயம் மரணங்களை பார்த்து அவர் சிரிக்கிறார். கள்ளச்சாராயத்தை யார் குடித்தாலும் சாவார்கள் என்று கூறுகிறார். அவரது பேச்சு ஆணவத்தின் உச்சமாக உள்ளது.
இந்த திமிர் பிடித்த மனிதனின் அழிவு தவிர்க்க முடியாதது. உணர்ச்சியற்ற முறையில் அவர் பேசுகிறார். பீகாரில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் அவதிப்பட்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்பியபோதும், நிதீஷ்குமார் தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுமட்டுமின்றி, சாப்ராவில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்களுக்கும் அவர் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை.
பீகார் போன்ற ஒரு ஏழை மாநிலம் ஆண்டு முழுவதும் மதுவிலக்கு காரணமாக கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடிகளை இழக்கிறது. பீகாரில் மதுவிலக்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மதுவிலக்கு காரணமாக ஏற்படும் நஷ்டத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஈடு செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
வெளிநாட்டில் வசிப்பவர்கள் சுலபமாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கலாம்!
பார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை: மீண்டும் சாம்பியன் ஆன இந்தியா
