பெண்களின் மேக்-அப் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெறுவது `லிப்ஸ்டிக்’. எந்தவித மேக்-அப்பும் இல்லாமல், பொருத்தமான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டாலே போதும்… பளிச் தோற்றம் நிச்சயம். இன்னொரு பக்கம், லிப்ஸ்டிக் போடும் வழக்கம் உள்ள பெண்களுக்கு சில பிரச்சினைகளும் உண்டு.
காலையில் போடும் லிப்ஸ்டிக் மாலைக்குள் அழிந்துவிடுவது, லிப்ஸ்டிக்கை எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பது, உதடுகள் மிகவும் வறண்டு காணப்படுவது என, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. பெண்களின் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வளிக்கும் விதத்தில், சந்தையில் பல பிரத்யேக லிப்ஸ்டிக்குகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
க்ரேயான் (Crayon)
அடர்ந்த மற்றும் பளிச் நிற விரும்பிகளுக்கு க்ரேயான் வகை லிப்ஸ்டிக் சரியான தேர்வாக இருக்கும். பொதுவாக இந்த வகை லிப்ஸ்டிக்குகள் பிரைட் நிறங்களில்தான் கிடைக்கின்றன. ஒருமுறை போட்டுக்கொண்டாலே போதும், நாள் முழுவதும் அழியாமலிருக்கும். க்ரேயான் லிப்ஸ்டிக் மேட் ஃபினிஷ், க்ரீம், லிப் லைனர் போன்ற வெவ்வேறு ரகங்களிலும் கிடைக்கிறது.
கிளாஸி (Glossy)
இந்த வகை லிப்ஸ்டிக்கில் உள்ள ‘லூமினஸ் ஃபேக்டர்’ (Luminous Factor) உதடுகளை மினுமினுப்புடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும். அதேபோல், இதன் பளபளப்பு மெல்லிய உதடுகளுக்குச் சற்றே பெரிதான தோற்றத்தையும் கொடுக்கும். திருமணம், பிறந்தநாள், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற இது, திரவம் மற்றும் ஸ்டிக் என இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. இதன் நெகிழ்வுத் தன்மையால் உணவு உண்ணும்போதும், நேரம் செல்லச் செல்லவும் எளிதில் அழிந்துவிடும். அதனால் 3 முதல் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உதடுகளைத் துடைத்துவிட்டு, மறுபடியும் லிப்ஸ்டிக் போடவேண்டிய தேவை ஏற்படும். கிளாஸி லிப்ஸ்டிக், வறண்ட உதடுகளுக்கான சிறந்த தீர்வு.
மேட் ஃபினிஷ் (Matt finish)
பளபளப்பான லிப்ஸ்டிக் வகைகளை விரும்பாதவர்களுக்குக் கைகொடுக்கக்கூடியது, `மேட் ஃபினிஷ்’ லிப்ஸ்டிக். பெரும்பாலும் இந்த வகை லிப்ஸ்டிக்குகள் அடர்ந்த நிறங்களில்தான் கிடைக்கும். இவை ‘ஷிம்மர்’ (Shimmer) மற்றும் ‘கிளாஸி’ (Glossy) லிப்ஸ்டிக் வகைகளைவிட நீண்ட நேரம் அழியாமல் இருக்கும். உதடுகளில் சிறிதளவு லிப் பாமை தடவிவிட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு மேட் லிப்ஸ்டிக் போடுவதன் மூலம் உதடுகள் வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.
க்ரீம் (Cream)
கிளாஸி மற்றும் மேட் ஃபினிஷ் இரண்டும் கலந்த கலவைதான் க்ரீம் வகை லிப்ஸ்டிக். இதில் எண்ணெய்த்தன்மை அதிகம் இருக்கும் என்பதால் கோடைக்காலத்தில் உபயோகிக்கும்போது, உதடுகளிலிருந்து வழியும் அளவுக்கு உருக வாய்ப்பிருக்கிறது. ஆனால், குளிர்காலத்தில் உபயோகிக்கும்போது வறட்சி, வெடிப்புகளிலிருந்து உதடுகளைப் பாதுகாத்து ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவும்.
பீல்-ஆஃப் (Peel-Off)
லிப்ஸ்டிக்கை உதடுகளின் சரியான வடிவத்துக்கு அப்ளை செய்ய முடியாமல் தடுமாறும் பெண்களுக்கான வரப்பிரசாதம், இந்த பீல் ஆஃப் லிப்ஸ்டிக். கல்லூரிப் பெண்களின் தற்போதைய டிரெண்டான இது `ஜெல்’ போன்று இருக்கும். இதில் தேவையான அளவை எடுத்து உதட்டில் பூச வேண்டும். காய்ந்ததும் உதட்டிலிருந்து உரித்தெடுத்தால், உதட்டில் வண்ணம் ஒட்டியிருப்பதைக் காணலாம். இது உதட்டிலிருந்து தனித்துத் தெரியாமல், உதட்டின் நிறமாகவே தோற்றமளிக்கும். நீண்ட நேரம் அழியாமல் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
மாய்ஸ்சரைசிங் லிப்ஸ்டிக் (Moisturizing Lipstick)
வறண்ட, சுருக்கம் நிறைந்த உதடுகளைக் கொண்டவர்கள் முதலில் லிப் ப்ரைமரை (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்) உதடுகளில் தடவ வேண்டும். அதன் மீது மாய்ஸ்சரைசிங் லிப்ஸ்டிக்கை தடவினால் தற்காலிகமாக சுருக்கம் தெரியாத வகையில் உதடுகளுக்குப் பொலிவான தோற்றத்தைக் கொடுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி கூட்டிய தலைமைக் கழகம்… திமுகவின் ‘குறிஞ்சி’ மெசேஜ்!
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு : மகா பஞ்சாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்!
“ED, சிபிஐ வைத்து கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்”: அமைச்சர் பேட்டி!