”சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வரும்… வேடிக்கை பார்க்க வராது. வேட்டையில் கூட தனது தன்னை விட பெரிய மிருகங்களை தான் அது வேட்டையாடி ஜெயிக்கும்” என பேசினார் விஜய்
மதுரையில் நடந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வருகிறது.
அப்போது வழக்கத்திற்கு மாறாக சிங்கத்துடன் ஒப்பிட்டு விஜய் தனது உரையை தொடங்கினார்.
அவர், ”சிங்கம் எங்கும் எதிலும் தனித்துவமானது. ஒருமுறை சிங்கம் கர்ஜித்தால் அது 8 கி.மீ தூரம் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வரும்… வேடிக்கை பார்க்க வராது. வேட்டையில் கூட தனது தன்னை விட பெரிய மிருகங்களை தான் அது வேட்டையாடி ஜெயிக்கும். எவ்வளவு பசியில் இருந்தாலும் உயிரில்லாத, கெட்டுப்போன இரையை தொட்டுக்கூட பார்க்காது.
அந்த சிங்கம் அவ்வளவு ஈசியா எதையும் தொடாது. தொட்டால் விடாது. தன்னுடைய எல்லையை வகுத்துக்கொண்டு அந்த காட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதற்கு கூட்டமாக இருக்கவும் தெரியும், தனியாக இருக்கவும் தெரியும்.
அப்படியே தனியாக வரும் என்று நினைத்தாலும், அஞ்சாமல் அலட்டிக்காமல் கெத்துக்காட்டும். சிங்கம் எப்போதும் சிங்கம் தான். காட்டில் எவ்வளவு குள்ளநரிகள் இருந்தாலும், ஒரே ஒரு சிங்கம் தான். அது தனியாக இருந்தாலும் அரசன். இது ஒன்றும் வெறும் சொற்கள் அல்ல… என்னுடைய தெளிவான நிலைப்பாடு” என்றார் விஜய்.
விஜய் பனையூரைத் தாண்டி வர மறுக்கிறார். திமுகவை மட்டுமே எதிர்த்து பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வரும் நிலையில், அதற்கு மறைமுகமாக சிங்கத்தை ஒப்பிட்டு விஜய் பேசியிருக்கிறார் என தவெக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
