‘மீ டூ’வில் புகார் அளித்ததற்காக கொலை மிரட்டல்: தனுஸ்ரீ தத்தா

சினிமா

தன்னைக் கொலை செய்யச் சதி நடப்பதாகப் பிரபல இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமாவில் 2000 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் தனுஸ்ரீ தத்தா. பட வாய்ப்பில்லாமல் நடிக்காமலிருந்த அவர் 2018ஆம் ஆண்டில் பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்போது தனுஸ்ரீ தத்தா மீண்டும் புதிய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள செய்தியில், “நான் தற்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். நான் குறி வைத்து மிகவும் மோசமாகத் துன்புறுத்தப்படுகிறேன். கடந்த ஆண்டு எனக்கு கிடைக்க இருந்த ஒரு பட வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு எனது வேலைக்காரி நான் குடிக்கும் தண்ணீரில் ஏதோ ரசாயனத்தை கலந்ததால் எனது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. எனது வாகனத்தில் சிலர் இரண்டு முறை பழுதை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தினர். நான் உயிரிழப்பதில் இருந்து தப்பித்து மும்பை வந்தேன். இப்போது எனது வீட்டிற்கு வெளியில் அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன. இதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். எங்கேயும் போகவும் மாட்டேன். இங்கேயே இருந்து எனது நடிப்பில் கவனம் செலுத்துவேன்.

பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், சமூக விரோத கிரிமினல்களும் சேர்ந்து கொண்டு என்னைத் துன்புறுத்துகின்றனர். இவை அனைத்திற்கும் ‘மீ டூ’வில் நான் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணமாகும். அநீதிக்கு எதிராக நின்றதற்காகத் துன்புறுத்தப்பட்டால் இது எந்த மாதிரியான இடம்..?. இங்கே அனைத்து விஷயங்களும் கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. இதனால் என்னைப் போன்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்று எனக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கலாம்..” என்று எழுதியுள்ளார்.

இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.