இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எல்.ஜி.எம்.
இந்த படத்தில் நடிகர் ஹரிஸ் கல்யாண், இவானா, நடிகர் யோகி பாபு மற்றும் நதியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், எல்.ஜி.எம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(ஜூலை 10) நடைபெற்றது.
இதில் தனது மனைவியுடன் தோனி கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தோனி, “எனது டெஸ்ட் அறிமுகம் சென்னை மண்ணில் தான் நிகழ்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் அடித்திருக்கிறேன்.
தற்போது தமிழில் தான் என் நிறுவனத்தின் முதல் படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண் எப்போதும் எனக்கு மிக முக்கியமானது.
இந்த மண்ணின் மகனாக நான் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டுவிட்டேன்.
எல்.ஜி.எம் படம் நிகழ்ந்ததற்கு விதிதான் காரணம். எனக்கும் சென்னைக்கும் இடையே வலிமையான பந்தம் உள்ளது” என்றார்.
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹர் குறித்து பேசிய தோனி,” தீபக் சஹர் ஒரு ஒயினை போன்றவர். அவர் உடனிருந்தால் ஏன் இவர் இருக்கிறார் என்று தோன்றும். எங்களுடன் இல்லையென்றால், அவரை தான் மனம் தேடும். அவரிடம் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சியாக செயல்பட தொடங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்