ஒரே பாலினம், திருநங்கையர் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று (ஆகஸ்ட் 5) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீடு கோரி அவர்கள் நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டிய நிலை வராது” என்று தெரிவித்தார்.
மேலும் , “திருநங்கையர், ஒரே பாலின திருமணங்களை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இருந்த போதிலும், அந்தத் திருமணங்களைப் பதிவு செய்யும் போது அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே ஒரே பாலின, திருநங்கையர் திருமணங்களை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தத் திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கும் வகையில், பதிவாளர்களுக்குத் உரிய உத்தரவுகளை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, திருநங்கைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்புக் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் ஏழு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கூறிய நீதிபதி இந்த கொள்கையை அமல்படுத்தியதற்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
