ADVERTISEMENT

எ‌ல் ஜி எனும் லெஃப்டினெண்ட் ஜெனரல் -திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி

Published On:

| By Mathi

LG Tiruchi Siva

திமுக மூத்த முன்னோடி ’எல்ஜி என்ற எல்.கணேசன்’, போராட்ட களங்களில் ‘லெஃப்டினெண்ட் ஜெனரலாக’ செயல்பட்டவர் என திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி. நெகிழ்வுடன் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

எல்ஜி குறித்து திருச்சி சிவா வெளியிட்டுள்ள பதிவு: எல் ஜி என எல்லோராலும் அழைக்கப்பட்ட எல் கணேசன், எங்கள் போராட்டக் களங்களின் லெஃப்டினெண்ட் ஜெனரல். என் போன்றோரின் ஆரம்ப அரசியல் நாட்களின் வசீகர சக்தி! என் மானசீக குரு!

ADVERTISEMENT

வெண்கல குரல், ஆழ்ந்த கற்றறிவு

துணிச்சல், வீரம் இவற்றின் ஒட்டு மொத்த உருவம், கேட்போரை கவர்ந்திழுக்கும் கணீரென்ற தனித்தன்மை பொருந்திய வெண்கல குரல், ஆழ்ந்த கற்றறிவு, அருவி போல் ஆங்கில பொழிவு. இவர் பேசும் மேடைகளில் உடன் சென்று பேசுவதில் அளவில்லா பெருமிதம். சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகளின்போது சண்டமாருதம், இந்தி எதிர்ப்பு போர்க்களத்தின் முன்னணி தளபதியாக அவசரநிலை காலத்தில் “மிசா“ சிறைவாசியாக, 1986 குண்டு வெடிப்பு நிகழ்வில் பொய் குற்றச்சாட்டு போன்ற நேரங்களில் அவர் காட்டிய அபரிமிதமான மன உறுதி, தைரியம் அளவிட முடியாத ஒன்று. கழகத்தில் அண்ணா, கலைஞர் ஊட்டிய குடும்ப பாசத்தின் எடுத்துக்காட்டு இவரே!

ADVERTISEMENT

ஈடு இணையற்றவர்

அன்பு, அரவணைப்பு, இளையோரையும் சமமாக நடத்திடும் பெருங்குணம் என அண்ணனுக்கு ஈடு மற்றொருவரில்லை. அண்ணாவின் அன்பையும், கலைஞரின் நம்பிக்கையையும், கழகத் தோழர்களின் அளவற்ற அன்பையும் ஒருசேர பெற்றவர்.

ADVERTISEMENT

“என்னங்கையா எப்பிடி இருக்கீங்க,“

சிலர் அருகில் இல்லாதபோதும், அவர்களை நினைக்கும்போதே முதலில் அவர்களின் குரல்தான் கேட்கும். அந்த வகையில் அண்ணா, கலைஞர், பேராசிரியர் வரிசையில் இவரும் ஒருவர்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை நிறைந்த வாயுடன் “என்னங்கையா எப்பிடி இருக்கீங்க,“ என்று பார்த்தவுடன் கேட்கும் குரலில் பாசம், மரியாதை, மகிழ்ச்சி எல்லாம் கலந்து இருக்கும். உடன் சுற்றுப்பயணம் சென்று திரும்பும்போது கிளம்ப நமக்கு மனமே வராது. பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இவர் அறையில்தான் கூட்டம் நிரம்பி வழியும். “I belong to his school of thought,” என்று சொல்லிக் கொள்வதில் பெருமை.

தனித்தன்மை பண்புகள்

கொள்கைப் பிடிப்பும், தாய்மொழிப் பற்றும், முற்போக்கு சிந்தனையும், பொதுவுடமை சித்தாந்த ஈடுபாடும், அருவியெனப் பேச்சும், கழக உடன்பிறப்புகளிடம் தோழமை உணர்வும், எல்லாவற்றிற்கும் மேல் தலைமையிடம் கொண்ட விசுவாசமும் இவருடைய தனித்தன்மைகள்.

படை வீரர்களை உருவாக்கியவர்

இவரால் இயக்கப் படை வீரர்களாய் உருவானோர் ஏராளம். அந்த தாக்கத்தின் சுவடுகள் இன்னும் உண்டு. அதில் நானும் ஒருவன். வயது 90ஐ கடந்திருக்கலாம். பிரிவென்பதும் இயற்கைதான். ஆனால் அண்ணன் எல் ஜி அவர்களின் மறைவு இந்த இலக்கணங்களுக்குள் அடங்காது.

அலை அலையாக நினைவுகள்

காலையில் இந்த செய்தி செவியில் விழுந்ததிலிருந்து செயலற்று உட்கார்ந்திருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதும் அளவு நினைவுகள் அலை அலையாக! இயக்கத்திற்கு ஒரு படைத் தளபதியின் இழப்பு, கழகத்தலைவருக்கு ஓர் அன்பு அண்ணனின் இழப்பு! எனக்கு குருவை இழந்த தவிப்பு! என் சொல்வேன்? யாருக்கு என்னால் தேறுதல் சொல்ல இயலும்? அன்பின் இருப்பிடம், பொறுமையின் வடிவம், கொள்கைவாதிக்கு கிடைத்த உற்ற துணை என் அண்ணி கமலாவின் முகத்தை எப்படிப் பார்க்க இயலும்? அவர் பெற்ற செல்வங்கள் எல் ஜி அண்ணா, மாதவி, கோயிந்தநாதன், இவர்களோடு அவரின் பிரியாத நிழலாக, இன்னலுற்ற நேரத்திலும் விலகாத உறவாக நிலைத்து நின்ற ஓட்டுநர் ராஜமாணிக்கம் இவர்களுக்கெல்லாம் ஆறுதல் எப்படி சொல்வதென தெரியவில்லை.

உடலால் அவர் இனி இல்லை. ஆனால் உணர்வால், ஊட்டிய பாசத்தால், திராவிட இயக்க கொள்கைப் பற்றால் என்றும் அவர் நம்முடனே இருப்பார்! இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பதிவிட்டுள்ளார்.

வைகோ இரங்கல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல்: மொழிப்போர் தளபதி என்றும், எல்.ஜி. என்றும் நம்மால் அன்புடன் அழைக்கப்பட்ட தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அண்ணன் எல்.கணேசன் இன்று காலை 5.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்ற செய்தியை சமத்துவ நடைபயணத்தின் போது கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரில் பிறந்த அண்ணன் எல்.ஜி, இளமைப் பருவத்திலேயே அறிஞர் அண்ணாவின் தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களிடமும், முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர் அவர்களிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்த அந்தக் காலம் முதல் இன்று வரை என் மீது அளப்பரிய அன்பும், பாசமும் கொண்டிருந்தவர் அண்ணன் எல்.ஜி. ஆவார்.

1965 ஆம் ஆண்டில் ஆதிக்க இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டின் மாணவர் பட்டாளம் நடத்திய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வெற்றி பெற அண்ணன் எல்.ஜி. அவர்கள் முனைப்போடு பணியாற்றினார்.

மாணவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளராக அவர் பணியாற்றியபோது, அவருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை அணிதிரட்டி போராடிய நினைவுகள் இப்போதும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுமையான வெற்றியையும், எழுச்சியையும் பெறுவதற்கு அச்சாணியாக பாடுபட்ட தலைவர்களில் அண்ணன் எல்.ஜி. முதன்மையானவர் ஆவார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில், மூதறிஞர் ராஜாஜி அவர்களிடமே இந்தித் திணிப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு அவரை திணறடிக்கச் செய்தவர் அண்ணன் எல்.ஜி.

ஊராட்சி மன்றத் தலைவராக 45 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி, நான் பிறந்த கலிங்கப்பட்டி கிராமத்தைப் போல பொது சுடுகாடு, அனைவருக்கும் பொதுவான குளம் ஆகியவைகளை உருவாக்கி சமத்துவ நெறியைப் பின்பற்றிக் காட்டியவர் அண்ணன் எல்.ஜி. ஆவார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் பேரவைச் செயலாளராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய அண்ணன் எல்.ஜி அவர்கள், மறுமலர்ச்சி தி.மு.கழகம் மலர்ந்தபோது, கழகத்தின் அவைத் தலைவராக சிறப்புடன் பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டு இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பொடா சிறைச்சாலையில் நான் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் கழகப் பணி தொய்வின்றி தொடரவும், என் விடுதலைக்காக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதில் சிறப்பாகப் பணியாற்றியதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.

அவரின் 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை தஞ்சை திலகர் திடலில் கழகத்தின் சார்பில் மாநாடு போல நடத்தி, நம் நினைவில் வாழும் அண்ணன் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகன் அவர்களை அழைத்து வாழ்த்துரைக்கச் செய்து, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் அண்ணன் எல்.ஜி. அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தோம்.

அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கு பேரிழப்பு ஆகும். தன்னிகரற்ற அவரது பொதுப்பணிக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, அவரது மறைவால் துயரம் அடைந்துள்ள அவரது துணைவியார் சகோதரி கமலா உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், தோழர்களுக்கும் என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share