பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தனது மனைவி சாயிரா பானுவை பிரிந்தார். இதையடுத்து, சோசியல் மீடியாவில் மோகினி தே என்ற கிட்டாரிஸ்ட்டுடன் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக வதந்தி கிளம்பியது. இந்த தகவலை சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா மறுத்திருந்தார்.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, ‘எனது தந்தை ஒரு லெஜன்ட். இசையில் மட்டுமல்ல மதிப்பு, மரியாதை, அன்பை செலுத்துவதிலும் அவர் லெஜண்ட்.
அவரை பற்றி தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும் போது வருத்தமளிக்கிறது. ஒருவரின் வாழ்க்கை மற்றும் மரபு பற்றி பேசும் போது நாம் அனைவரும் உண்மை மற்றும் மரியாதையின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை எழுதுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் பாதுகாப்போம்’ என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹீமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , ‘எப்போதும் நினைவு கொள்ளுங்கள். வதந்தி வெறுப்பை பரப்புபவர்களால் உருவாக்கப்படுகிறது. அறிவில்லாதவர்களால் பரப்பப்படுகிறது. முட்டாள்களால் நம்பப்படுகிறது ‘என்று தெரிவித்துள்ளார். மற்றோரு பதிவில் ரஹீமா, ‘நீங்கள்தான் எப்போதும் எங்களுக்கு ராஜா. நீங்கள்தான் எங்களுக்கு எப்போதும் தலைவர். வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்’ என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானும் அவரின் மனைவி சாயிரா பானுவும் 29 ஆண்டு கால மண வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் ஒரு மகன் உண்டு. அனைவருமே இசைத்துறையில்தான் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்