வெற்றிப் பயணத்தை தொடர்வோம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

Published On:

| By Jegadeesh

இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல இந்த ஆட்சியின் வெற்றி, கழகத்தின் வெற்றி என்றும் இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 2 ) வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிகமோசமான சொற்களைப் பயன்படுத்தி பரப்புரை செய்தார் பழனிசாமி. வேட்டி இருக்கிறதா – மீசை இருக்கிறதா ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம்தர ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல அவர் பேசினார். நான்காண்டுகாலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழனிசாமி. அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்நீளம் காட்டினார் என்று கூறியுள்ளார்.

மேலும், பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, ‘எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’ என்றார். பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு பிரைவேட் மெசேஜ்… மேடையில் பப்ளிக் மெசேஜ்… ஸ்டாலின் வைக்கும்  ட்விஸ்ட்!

வெளியானது ‘சொப்பன சுந்தரி’ ட்ரைலர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share