தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம், 2026-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாள் (18.06.2026) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று அறிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட 35 பேர் அமைச்சர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், இன்று (ஜூன் 5) காலை அமைச்சரவைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் 2026-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடும். இக்கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்,” என்று கூறப்பட்டுள்ளது.
