எல்இடி தொலைக்காட்சிகளின் விலை விரைவில் அதிகரிக்கக்கூடும் என்று தொலைக்காட்சி உற்பத்தியாளர்கள் சார்பில் கூறப்படுகிறது.
தற்போது மக்களால் அதிகம் விரும்பப்படும் டிவிக்களில் எல்இடி தொலைக்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 32 இன்ச் முதல் 85 இன்ச் வரை HD Ready, Full HD, 4K Ultra HD போன்ற பல்வேறு பிக்சல்களில் எல்இடி டிவிகள் உள்ளன.
இணையத்துடன் இணைக்கும் வசதி, செயலிகள், கேம்கள் மற்றும் மொபைல் ஸ்கிரீன் காஸ்டிங் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் இருப்பதால் இளைஞர்கள், குழந்தைகள் என பலரும் எல்இடி டிவிகளை விரும்புகின்றனர்.
இந்தநிலையில் எல்இடி டிவிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள ஃபிளாஷ் மெமரி பற்றாக்குறையும், அதன் விலையேற்றமும், செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சியும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக டிவிகளுக்கு பயன்படுத்தும் முக்கிய பாகமான ‘ஓப்பன்-செல் பேனல்’களின் விலையில் ஏற்பட்டுள்ள கடும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதன் விலை 35% வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஓப்பன்-செல் பேனல்கள் ஒரு தொலைக்காட்சியின் மொத்த விலையில் 60-65% வரை ஆக்கிரமித்துள்ளதால், அதன் விலை உயர்வு நேரடியாக டிவி விலையை பாதிக்கிறது.
தற்போது சந்தையில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள் DDR3 மற்றும் DDR4 ஆகிய மெமரிகளை பெருமளவில் உற்பத்தி செய்வதில்லை என சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் அனைத்துமே எஐ டேட்டா மையங்களுக்கு தேவையான சிப் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக இத்தகைய மெமரி செட்டுகள் உற்பத்தி குறைந்துவிட்டதால் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கு தேவையான மெமரி சிப்புகள் கிடைக்காமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன.
இந்நிலையில், 2021-2022 ஆம் ஆண்டு சிப்செட் பற்றாக்குறைக்குப் பிறகு தற்போது மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், எல்இடி டிவிகளின் விலை விரைவில் உயரும் என்றும் டாம்சன் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
வீடியோடெக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் பஜாஜ், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும், நினைவக விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இந்த உயர்வு நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
உற்பத்தி நிறுவனங்கள் (OEMs) மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த பற்றாக்குறையின் தாக்கம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
