திருப்பரங்குன்றம் வழக்கில் கோயில் மலை மீது உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கார்த்திகை நாளில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள மலையில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் மரபை பின்பற்றி வழக்கம்போல் உச்சி பிள்ளையார் கோயில் உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை பகுதியில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து இன்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் அயோத்தி போல் மாறுவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இன்று கோவையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 80க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மத நல்லிணக்கத்தை சிதைக்கின்ற வகையில் கருத்துக்களை கூறி வருகின்றார். அதன் வழியில் இந்த திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1926 சிவில் நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து ரிட் மனுவில் ஒரு மோசமான தீர்ப்பை சுவாமிநாதன் வழங்கியிருக்கிறார். அவரது தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்தை பிரதிபலிக்கவில்லை.
மத நல்லிணக்கத்தை குலைக்கின்ற தீர்ப்பாக இருக்கின்றது. நீதிபதி சுவாமிநாதன் முன்பு மதம் தொடர்பான எந்த வழக்குகளையும் விசாரிக்க அனுமதிக்க கூடாது.
நீதிபதி சுவாமிநாதனை பணிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது வேறு மாநிலத்திற்கு இடம் மாறுதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
