குட் பேட் அக்லி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்! – வக்கீல் சொல்வதென்ன?

Published On:

| By christopher

lawyer saravan notice on good bad ugly uses ilaiyaraja

நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக, பட தயாரிப்பாளர்களிடம் இசையமைப்பாளர் இளையராஜா ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். lawyer saravan notice on good bad ugly uses ilaiyaraja

தற்போது வெளியாகி வரும் புதிய திரைப்படங்களில் பழைய பாடல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, விக்ரம் படத்தில் இடம்பெற்ற ‘என் ஜோடி மஞ்சள் குருவி’, சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பல ரெட்ரோ பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு ரசிகர்களும் தியேட்டர்களில் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா, அனுமதியின்றி பயன்படுத்திய தனது 3 பாடல்களையும் குட் பேட் அக்லி படத்தில் இருந்து 7 நாட்களில் நீக்கி, எழுத்துப்பூர்வ நிபந்தனை ஏற்ற மன்னிப்பு கூறவேண்டும் என்றும், நஷ்ட ஈடாக ரூ.5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் அளித்த பேட்டியில், “சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையமைப்பாளரே பாடல்களுக்கு உரிமையுடையவர். அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு உரிமையாளரான இளையராஜாவிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம், அனுமதி பெறாமல் அவரது பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்.

உரிமையை யாரும் விட்டுக்கொடுக்க முடியாது. அனுமதி இல்லாமல் அவருடைய பாடல்களை எப்படி பயன்படுத்த முடியும்? படைப்பாளி அவரது உரிமைக்காக போராடுகிறார்.

பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ளனர். பாடல்களை அனுமதியின்றி ரீமிக்ஸ் செய்தால் அதனை நிறுத்துவதற்கு சட்டத்தில் இசையமைப்பாளருக்கு முழு உரிமை உள்ளது.

இதன்காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதிலை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை இளையராஜாவிடம் கலந்துபேசி முடிவெடுப்போம். அவர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள் என்றால் அப்போது பேசி முடிவெடுக்க முடியும்” என்று சரவணன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற மலையாள திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் பயன்படுத்தப்பட்டது. அத்திரைப்படமும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வசூலை வாரி குவித்து மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்தது. அப்போது தன் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா தரப்பில் ரூ.2 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share