திருமணத்திற்குப் பின் மீண்டும் ‘லாவண்யா’!

Published On:

| By Kavi

தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி. அப்படங்களில் சசிகுமார், சந்தீப் உடன் ஜோடியாக நடித்தபோதும் அவை மிகப்பெரிய வெற்றியைப் பெறாத காரணத்தால், தான் அறிமுகமான தெலுங்கு திரையுலகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் லாவண்யா. தற்போது அவரது நடிப்பில் ‘தணல்’ என்ற தமிழ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படம் அவர் திருமணத்திற்கு முன்னர் நடித்ததாகச் சொல்லப்படுகிறது. lavanya-again-after-marriage

2023ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியன்று தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த வருண் தேஜை திருமணம் செய்தார் லாவண்யா. இவர், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகன். தெலுங்கில் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்ற சில திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் என்ற பாராட்டைப் பெற்றவர்.

மிஸ்டர் எனும் படத்தில் லாவண்யாவும் வருணும் இணைந்து நடித்தனர். அதனைத் தொடர்ந்து காதலில் விழுந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தனர்.

ஓராண்டுக்கும் மேலாகக் குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றுவந்த லாவண்யா, தற்போது திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிப்பில் இறங்கியிருக்கிறார்.

தாதினேனி சத்யா இயக்கும் ‘சதிலீலாவதி’ எனும் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக தேவ் மோகன் என்பவர் இடம்பெற்றிருக்கிறார்.

டைட்டிலை கேட்டதுமே, ‘இது ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட்’ என்று தெரிந்துவிடும். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாகவும், கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.

திருமணத்திற்குப் பின் நடிக்க வரும் நடிகைகள் நாயகிகளாகத் தொடர்வது கஷ்டம் என்று சொல்லப்படும் நிலையில், லாவண்யாவின் வரவு அதனைப் பொய்யாக்கியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் அதற்கான சமீபகால உதாரணங்களாக ஜோதிகா, சிம்ரன், நயன்தாரா, சமந்தா எனச் சில மூத்த நடிகைகள் திகழும் நிலையில், அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் லாவண்யா. lavanya-again-after-marriage

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share