நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் செய்து, அதன் பிறகு தனது உடல் நலம் காரணமாக அரசியல் முடிவை கைவிட்டார்.
இதே நேரம் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்தப் பின்னணியில் தயா பவுண்டேஷன் மூலமாக ஓர் புதிய இயக்கத்தை தொடங்க முடிவு செய்திருக்கிறார் லதா ரஜினிகாந்த்.
கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை கிண்டியில் லதா ரஜினிகாந்த் தலைமையில் தயா பவுண்டேஷன் அமைப்பின் முதன்மை சிறப்பு உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரஜினி முருகன்,
வேல்முருகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டத்திற்கு இரண்டு முதல் நான்கு பேர் வரையில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சனை என்ன, சிறப்பு கவனம் எடுக்க வேண்டிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து அவர்களிடம் லதா ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.
அப்போது பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் பாரம்பரிய தொழில்கள் நசிந்து விட்டதாகவும் அந்த பாரம்பரிய தொழில்களை செய்த மக்கள் தற்போது வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பாரம்பரிய முறையில் பாத்திர தொழில் செய்பவர்கள், நகை தொழில் செய்பவர்கள், பானைகள் புனைபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்பவர்களின் தற்போதைய நிலைமை கவலையாக இருப்பதாக பகிர்ந்து கொண்டனர்.
இதையெல்லாம் குறித்துக் கொண்ட லதா ரஜினிகாந்த் நிறைவுரையாற்றுகையில்…
“பாரம்பரிய தொழில்களை, விவசாயத்தை கைவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக அவர்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை செய்திட வேண்டும்.
இதை தவிர நான் ஒரு முக்கியமான பிரச்சனையை பார்க்கிறேன். பள்ளி குழந்தைகள், சிறுவர்கள் செல்போனில் மூழ்கிக் கிடக்கும் காட்சியை மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை இன்று பார்க்க முடிகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடாத நிலையில் தான் இது போன்று நேர்கிறது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு கொடுக்கும் நிகழ்ச்சிகளை நாம் நடத்த வேண்டும். செல்போனுக்கு மாற்றாக அவர்களுக்கு மாற்று விளையாட்டு பயிற்சி கொடுப்பது பற்றி நாம் அந்த நிகழ்வுகள் வாயிலாக எடுத்துரைக்க வேண்டும்.
இதே போல பாரம்பரிய தொழில் செய்ய முடியாமல் கைவிட்ட முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கான கூட்டங்களை ஜனவரி முதல் துவங்க வேண்டும்” என பேசினார் லதா ரஜினிகாந்த்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர், “நமது நிகழ்ச்சிகளுக்கு தலைவர் ரஜினிகாந்த் வருவாரா? ” என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த லதா ரஜினி, “அவருடைய பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்த நிகழ்வுகளில் அவர் விருப்பப்பட்டால் மட்டுமே கலந்து கொள்வார். இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமது வேலைகளை நாம் தொடர்ந்து செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார் லதா ரஜினிகாந்த்.
கிராமங்களை நோக்கி குறிப்பாக கிராமத்து மாணவர்களை நோக்கி லதா ரஜினிகாந்த்தின் இந்த புதிய இயக்கம் 2025 முதல் தீவிரமாக செயல்பட இருக்கிறது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : பாரத ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு!
டாப் 10 நியூஸ் : மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முதல் விஜயகாந்த் குருபூஜை வரை!