கொரோனா பிரச்னைகள் மற்றும் நீண்டகால லாக்டவுன் காரணமாக பல அரசு, தனியார் பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தி வருகின்றன.
மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த வகுப்புகளால் ஆசிரியர்களும், மாணவர்களும் அவர்களது பெற்றோரும் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. [இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள் படும் அவஸ்தைகள் குறித்து அபிஷேக் குமார் என்னும் இளைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.](https://www.facebook.com/1380566685384483/posts/3061032734004528/) பிரபலமான அந்த வீடியோவை அவ்வாறே நடித்துக்காட்டி வேறு சிலரும் சமூகவலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சிறுமி ஒருவர் ‘தான் ஜானகி டீச்சர்’ என்று கூறிக்கொண்டு ஆன்லைன் கிளாஸ் அவலங்களை விளக்கியுள்ளார்.
அனைவரையும் கவர்ந்த இந்த வீடியோ ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப்பக்கங்களில் பலராலும் பகிரப்பட்டும், பல பக்கங்களில் பதிவேற்றப்பட்டும் வருகிறது.
அந்த வீடியோவில் தன்னை ஒரு ஆசிரியராகக் காண்பித்துக் கொண்டு, “ஹலோ, நான் ஜானகி டீச்சர் பேசுறேன். நான் என்னோட ஸ்கூல் குழந்தைங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆனா அதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு. பசங்க கிளாஸ் அட்டண்ட் பண்றாங்களோ இல்லையோ அவங்க அப்பா-அம்மா எல்லாரும் ஒழுங்கா வந்து கிளாஸ்ல உக்காந்திடுறாங்க. அதிலையும் குறிப்பா இந்த அம்மாக்கள்.
எப்போ கிளாஸ் ஆரம்பிக்கிறேனோ, அப்போ தான் அவங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட வருவாங்க. அது கூடப் பரவாயில்ல. ஒரு அம்மா, அவங்க குழந்தையோட பல் விளக்குறாங்க. நான் ஹோம் வொர்க் காட்டுங்கன்னு சொல்றேன். அவங்க அம்மா ‘ஈ’ காட்டுன்னு சொல்றாங்க. அம்மாக்கள் கூட எவ்வளோ மேல். இந்த அப்பாக்கள் இருக்காங்களே…..நேற்று நான் கிளாஸ் எடுத்திட்டு இருந்தப்போ, ஒரு அப்பா மேல் சட்டையே போடாம குட்டியா கால்சட்டை போட்டு அங்கேயும், இங்கேயும் நடந்திட்டு இருக்காரு. அவரைப் பாத்ததும் பசங்க எல்லாரும் கெக்க பொக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
மொத்த கிளாஸ் இரண்டு மணி நேரம் தான். அதில ஒரு மணி நேரம் சிரிக்கிறதிலயே போயிரும். இன்னொரு மணி நேரம் அட்டண்டன்ஸ் எடுக்கணும். கிளாஸே முடிஞ்சிரும். பசங்க நோட்ஸ் எடுக்குறாங்களோ இல்லையோ என்னோட உயிர நல்லா எடுக்குறாங்க. ஒருத்தரோட வீடியோ ஆன் பண்ணி இருந்தா ஆடியோ ஆஃப் பண்ணி இருக்கும். ஆடியோ ஆன் பண்ணி இருந்தா வீடியோ ஆஃப் பண்ணி இருக்கும். சில ஸ்பெஷல் விஐபிக்கள் இருக்காங்க. வீடியோ, ஆடியோ ரெண்டுமே ஆஃப்.
எனக்குத் தெரியும். அவன் ஏதோ விளையாடிட்டு தான் இருக்கான். ஆனா அவன்கிட்ட என்னால எதுவும் கேக்க முடியாது. ஏன்னா அவன் ப்ரின்சிபில் பையன். அவன எதாவது கேட்டா போதும். அவரு வந்திருவாரு. ‘அவன் சின்ன குழந்தை ஜானகி. அவன் அப்படியே இருக்கட்டும்’ன்னு சொல்லுவாரு. ஆனா அவரோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மட்டும், ‘நெப்போடிசம் கூடாது. யாரும் அவங்களுக்கு இருக்குற பவர், அத தப்பா யூஸ் பண்ணாதீங்க’ன்னு. நல்லா இருக்கே இந்த கூத்து” என்று கோபத்துடன் அந்த குழந்தை பேசுவது நம்மை சிரிக்க வைத்து விடுகிறது.
ஆனால் சிரிக்க மட்டும் அல்ல. சிலவற்றை சிந்திக்கவும் வேண்டியுள்ளது. பல ஆன்லைன் வகுப்புகளும் இதை விட மோசமான நிலையில் தான் இருக்கிறது. வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கத் தேவையான கேமராவுடன் கூடிய மொபைல் ஃபோன்களும், அவற்றிற்கு இணைய சேவையும் பெற்றுக்கொள்வதே பல பெற்றோருக்கும் சிரமமாக இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்பிப்பது சிறந்த வழிதான் என்றாலும், மோசமான நெட்வொர்க்கின் காரணமாக ஆன்லைனிற்குள் வருவதற்கே பலரும் போராட வேண்டியதாக உள்ளது.
ஆன்லைன் வகுப்பில் குழந்தைகள் பங்கேற்றால், வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை செய்யும் பல பெற்றோர்களும் இரண்டிலும் கவனம் செலுத்த முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். இந்த பிரச்னைகளில் சிலவற்றைக் குறித்து நகைச்சுவையாக எடுத்துரைத்த குழந்தைக்கு அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் விதமான மாற்று வழியுடன் தொடர்ந்து இத்தகைய வகுப்புகள் நடைபெறுவது தான் சிறந்தது என்று பெற்றோரில் பலரும் வீடியோவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”
