உதவி செய்ய ஓடிய பெண்: மனம் கவர்ந்த மனிதநேயம்!

Published On:

| By Balaji

கேரளாவில் வழி தெரியாமல் தவித்து நின்ற கண்பார்வையற்ற முதியவருக்கு உதவி செய்த பெண் ஒருவரின் வீடியோ இணையவாசிகளின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.

வேகமாக வரும் பேருந்தை நோக்கி மூச்சிரைக்க ஓடி வரும் பெண் ஒருவரின் வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ஓடி வந்த அவர் பேருந்தை நிறுத்தி மீண்டும் திரும்பி ஓடி அங்கே நின்ற கண்பார்வையற்ற முதியவர் ஒருவரை அக்கறையுடன் அழைத்துக் கொண்டு வந்து பேருந்தில் ஏற்றிவிடுகிறார். பின்னர் ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு நிம்மதியுடன் நடந்து நகர்கிறார்.

ADVERTISEMENT

இந்தக் காட்சியை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பல இடங்களிலும், பலராலும் பகிரப்பட்டு வந்தது. அதனைப் பார்த்தவர்கள் அனைவரும் வீடியோவில் இருக்கும் அந்த இளம் பெண்ணின் இளகிய மனதைப் பாராட்டி வந்தனர்.

ADVERTISEMENT

அத்துடன் வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பது குறித்த தேடலையும் இணையம் வழியாக நடத்தினர். அவ்வாறே அவரை கண்டறிந்தும் விட்டனர். கேரளாவின் திருவல்லா என்னுமிடத்திலுள்ள ‘ஜோலி சில்க்ஸ்’ என்னும் துணிக்கடையில் வேலை பார்த்து வரும் சுப்ரியா தான் அவர்.

மக்களின் மனங்களை வெற்றி கொண்ட அந்த சம்பவம் குறித்து சுப்ரியா மலையாள ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். அதுகுறித்து அவர் பேசுகையில், “தினமும் சாயங்காலம் ஆறு முப்பது மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லக் கிளம்புவேன். தினமும் என்னுடைய கணவர் வந்து என்னை அழைத்து செல்ல வருவார். அன்று அவ்வாறு நான் வேலை முடிந்து கிளம்பும் போது கண் பார்வையற்ற ஒருவர் சாலையின் நடுவே நிற்பதைப் பார்த்தேன். அவர் அவ்வாறு நிற்பதைப் பார்த்ததும் எனக்கு பயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

முதலில் சென்று உடனடியாக அவரை சாலையின் ஓரத்திற்கு அழைத்து வந்தேன். கணவர் வந்ததும் அவரை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து செல்லலாம் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் பஸ் வந்து விட்டது. நான் உடனடியாக ஓடிச்சென்று பஸ்சை நிறுத்தி நடத்துனரிடம் விஷயத்தைக் கூறினேன். அவரும் காத்திருந்தார். பின்னர் சென்று அந்த முதியவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டேன். ஆனால் இது தொடர்பான வீடியோ எடுக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் தாமதமாகத்தான் எனக்குத் தெரியவந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share