மன உறுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த திறமையை வெளிக்காட்டவும், உயரங்களை எட்டிப்பிடிக்கவும் என்றுமே வயது ஒரு தடையாக இருக்காது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோ ஒன்று அந்த உண்மையை ஆழமாக உணர்த்துகிறது.
நரை விழுந்த முடியுடன், வயதான தோற்றத்தில் இருக்கும் பெண்மணி ஒருவர் நேர்த்தியுடன் நடனமாடும் அந்த வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சற்றும் தளராமல், புன்னகைத்தவாறே அவர் நடனமாடுவது பார்ப்பவர்களுக்கும் புத்துணர்வு அளிப்பதாக உள்ளது. கடினமான நடன அசைவுகளை இந்த வயதிலும் அவர் எளிதில் கையாளுவதைப் பார்த்து ஆச்சரியமடைந்த பலரும் அவரை யார் என்று தேட ஆரம்பித்தனர்.
அவரது பெயர் பிஜாயிணி சத்பதி. 48 வயதாகும் புகழ்பெற்ற ஒடிசி நடனக்கலைஞரான அவர் தனது 7 வயது முதல் நடனம் பயின்று வருகிறார். நிர்தியகிராம் எனப்படும் இந்தியாவின் முதல் மாடர்ன் குருகுலத்தில் 1993 ஆம் ஆண்டு இணைந்தார். நிர்தியகிராம் நாட்டிய கலைஞர்களுக்கு பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக், குச்சுப்புடி, ஒடிசி, மணிப்புரி என்று இந்தியாவின் பாராம்பரிய நடனங்களை எல்லாம் இந்த குருகுலத்திலேயே தங்கி படிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 25 ஆண்டுகளாக அங்கு தனது கலைத் தொண்டாற்றி வருகிறார்.
யோகா, களரிப்பயிற்று போன்றவற்றுடன் நடனத்தை இணைந்து புதுவிதமான நாட்டிய விருந்தை பார்வையாளர்களுக்கு காட்சி விருந்து படைத்து வருகிறார். அதிக எடை கொண்ட உடற்பயிற்சி உபகரணங்களைக் கையில் வைத்தவாறும் அவர் நடனமாடி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது அசாத்திய திறமையைப் பாராட்டும் விதமாக ‘மஹரி விருது’, ‘சன்ஸ்க்ரிதி விருது’, ‘நிர்த்திய சூடாமணி விருது’ உள்ளிட்ட பெருமைக்குரிய விருதுகளும் அவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**,”
