வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘அருவா’, ‘வாடிவாசல்’ போன்ற திரைப்படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில் ‘வாடிவாசல்’ திரைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிறது. இப்படத்தைத் தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்திற்கு நாவலின் அதே பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழரின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு குறித்த கதை என்பதால் ரசிகர்களுக்குப் படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூலை 23) சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
#வாடிவாசல் #Vaadivasal pic.twitter.com/smEdgnavXL
— Vetri Maaran (@VetriMaaran) July 23, 2020
அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் வீரம் மிளிரும் கிராமத்து இளைஞனின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ‘அசுரன்’ திரைப்படத்திற்குப் பிறகு கலைப்புலி எஸ்.தாணு-வெற்றிமாறன் கூட்டணி ‘வாடிவாசல்’ திரைப்படம் மூலமாக மீண்டும் இணைந்துள்ளதுடன், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 75ஆவது திரைப்படமாகவும் வாடிவாசல் உருவாகிறது.
படத்தின் அறிவிப்பு வெளியான நேரத்தில் இதனைக் குறிப்பிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ், **“என்னுடைய 75ஆவது திரைப்படம். மிகவும் ஸ்பெஷலானது. வெற்றிமாறன், சூர்யா, தாணு என வலிமையான கூட்டணியில் அதன் சத்தமும் தனித்துவமானதாக இருக்கும்”** என்று கூறியிருந்தார். வலிமையான கதையை, வலிமை மிக்க கூட்டணி திரைப்படமாக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வலுவாகியுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
