கொரோனா போராளிகளுக்குக் கல்விக்கொடை: ஐசரி கணேஷ்

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி சேவை அளிக்கவிருப்பதாக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக தினந்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பெரிதும் அஞ்சுகின்றனர். ஆனால் இந்த ஆபத்தான நிலையிலும்கூட தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் போன்றோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தொடர்ந்து மக்கள் நலனுக்காகப் போராடி வருகின்றனர். அவர்களது ஒப்பற்ற சேவையைப் பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், காவல் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவுள்ளதாக ஐசரி கே.கணேஷ் அறிவித்துள்ளார். அதன்படி அவர்களது குழந்தைகள் இந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட இளங்கலை பட்டப்படிப்பை முற்றிலும் இலவசமாகப் படித்து முடிக்கும் அரிய வாய்ப்பை வழங்கவுள்ளதாக ஐசரி கே.கணேஷ் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் என மூன்று துறைகளிலும், ஒரு துறைக்கு 100 பேர் என்னும் அளவில் மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளான மொத்தம் 300 மாணவ மாணவியருக்கு, 2020ஆம் ஆண்டின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் இந்தக் கட்டணம் இல்லா கல்வி அளிக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன், இந்த அசாதாரண காலத்தில் நம்மை பெரிய துயரிலிருந்து காத்துவரும் செயல் வீரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர்களும், தனியார் பல்கலைக்கழக வேந்தர்களும் இத்தகைய உதவிகளை புரிந்திட முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தன்னையும், வீட்டையும் மறந்து மக்கள் நலனுக்காகப் போராடிவரும் கொரோனா பணியாளர்களுக்கு, ஐசரி கணேஷ் அறிவித்திருக்கும் இந்த உதவியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share