உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய்க்கு- நவம்பர் 21-ந் தேதி பிரிவு உபச்சார நிகழ்வு நடைபெற்றது.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14-ந் தேதி பதவியேற்றார். நாளை நவம்பர் 23-ந் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெறுகிறார். இதனால் பணி இறுதி நாளான நவம்பர் 21-ந் தேதி பி.ஆர். கவாய்க்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பி.ஆர். கவாய் பேசியதாவது:
- நான் புத்த மதத்தைப் பின்பற்றுகிறேன்; ஆனால் மதச்சார்பற்றவன்.
- 1985-ல் சட்டத்துறை மாணவராகச் சேர்ந்த நான் தற்போது நீதித்துறை மாணவனாக பணி விலகுகிறேன்.
- அரசியல் சாசனம் நிலையானதாகவே இருக்க வேண்டும் என்பது இல்லை; அது பரிணாமம் அடைய வேண்டும்; அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும்.
- நீதிபதி பணியை அதிகாரம் கொண்ட பதவியாக நான் ஒருபோதும் பார்க்கவே இல்லை.
- நீதிபதி பணி என்பது இந்த சமூகத்துக்கும் தேசத்துக்குமான சேவையாற்றுகிற பணியாகவே கருதினேன்.
- அண்ணல் அம்பேத்கர் சமூக நீதி, பொருளாதார நீதிக்காக குரல் கொடுத்தார்; வாதிட்டார்.
பிஆர் கவாய் தீர்ப்புகள்
- பணமதிப்பிழப்பு செல்லுபடியாகும்
- முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு செல்லும்
- ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்தது செல்லும்
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து
- வக்ஃப் சட்ட திருத்த சரத்துகள் சிலவற்றை நிறுத்தி வைத்து உத்தரவு
- அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டு தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை
- புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிக்க தடை
- நீண்டகாலம் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது
- மராத்தா, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து
- சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் இடம் பெற்றிருந்தார் பிஆர் கவாய்.
ஆளுநர்கள் வழக்கு
மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்ற கருத்தை வழங்கியது பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு. இது மாநில உரிமைகளுக்கு எதிரானதாக விமர்சிக்கப்படுகிறது.
தலித்துகளுக்கு தீங்கிழைத்த தீர்ப்புகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவி வகித்த காலத்தில் 2 முக்கிய வழக்குகளில் தலித்துகளுக்கு பாதகம் ஏற்படும் தீர்ப்புகளை வழங்கினார் பிஆர் கவாய் என்கிறார் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில், ” பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பிஆர் கவாய், அம்பேத்கரியரின் மகன், பௌத்தர் – எனப் பல்வேறு சிறப்புகள் அவருக்குண்டு.
அவர் நீதிபதியாக இருந்து எஸ்சி சமூகத்துக்கு இரண்டு பெரிய தீமைகளைச் செய்திருக்கிறார். ஒன்று: எஸ்சி பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனை அனுமதித்தது. இந்தத் தீர்ப்பு எஸ்சி சமுகத்தினரின் எண்ணிக்கை பலத்தை உடைத்து அவர்களுக்குள் பகையை ஏற்படுத்தியது.
இரண்டு: கிரீமி லேயர் அளவுகோல் எஸ்.சி பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறியது. எஸ்சி சமூகத்தினர் உயர் பதவிகளுக்கு வருவதைத் தடுப்பதற்காகவும், எஸ்சி இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யவும் சனாதனிகள் நீண்டகாலமாக செய்துவரும் பிரச்சாரம் இது. அதை திரு பி.ஆர்.கவாய் வழிமொழிவது வேதனை அளிக்கிறது.
பி.ஆர்.கவாயைப் போன்ற அரசியல் பின்னணி எதுவும் இல்லாத கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவர் இத்தகைய தீங்கை தலித் சமூகத்துக்குச் செய்யவில்லை.
பட்டியல் சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய ஒருவராகவே வரலாற்றில் பி.ஆர்.கவாய் நினைவுகூரப்படுவார் என விமர்சித்துள்ளார்.
வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு ரத்து
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய். இந்த அமர்வு அளித்த தீர்ப்பு: மக்கள் தொகை அடிப்படையில் சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் இதற்கு நியாயமான காரணங்களை மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும். வன்னியர் உள் இடஒதுக்கீட்டில் உரிய காரணங்கள் சொல்லப்படவில்லை. ஆகையால் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டையும் நீதிபதி கவாய் இடம் பெற்றிருந்த அமர்வு ரத்து செய்தது.
53-வது தலைமை நீதிபதி
உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நவம்பர் 24-ந் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்பு செய்து வைப்பார்.
