நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 4) தள்ளுபடி செய்தது. Land grabbing case
மதுரை சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு அருகில் இருந்த 44 சென்ட் கோயில் நிலத்தை அபகரித்ததாக, மு.க.அழகிரி மீது அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி மதுரையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 420 (மோசடி), 423 (மோசடி செய்து பத்திரத்தை செயல்படுத்துதல்), 465 (போலி) மற்றும் 471 (போலி ஆவணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவுகளில் இருந்து அழகிரியை மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விடுவித்தது.
ஆனால் ஐபிசி பிரிவுகள் 120பி (குற்றச் சதி) மற்றும் 408 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர்.
அதேசமயம் வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அழகிரி மனு தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களும் இன்று (மார்ச் 4) நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நில அபகரிப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை ஏற்ற நீதிபதி, போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து மு.க.அழகிரியை விடுவித்து மதுரை நடுவர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். Land grabbing case