திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 7) மாலை நடைபெறுகிறது. இதைஒட்டி அங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர். ஒவ்வொரு ஆண்டும் இங்கும் நடைபெறும் பல்வேறு விழாக்கள் பிரசித்தி பெற்றவை. அவற்றில் முக்கியமானது கந்தசஷ்டி விழா.
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த இடம் என புராணங்களில் திருச்செந்தூர் கூறப்பட்டுள்ளதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரம், சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடம் உள்ளிட்ட முன்னேற்பாட்டுப் பணிகளை தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில் தக்கார் திரு. அருள்முருகன் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

இன்றைய வழிபாட்டு நிகழ்வுகள் என்னென்ன?
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான இன்று நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற காலவேளை பூஜைகள் நடைபெற்றன.
காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய நிலையில், காலை 9 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பகல் 12.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். அங்கு தீபாராதனை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வதம் செய்கிறார் ஜெயந்திநாதர்.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேருகிறார். அதன் பிறகு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும்.
தொடர்ந்து 7-ம் நாளான நாளை இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.

குவிந்து வரும் பக்தர்கள்!
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாள்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இன்று திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வழியெங்கும் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 4500 போலீஸார்!
இதனையடுத்து திருச்செந்தூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் சூரசம்ஹாரத்தை காண வசதியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை பக்தர்கள் சிரமமின்றி காண வசதியாக முக்கிய இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்கும் மக்களின் கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் சுமார் 4500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடற்கரை உள்ளிட்ட இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்செந்தூர் பேரூராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரையில் பக்தர்களின் உதவிக்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீன்வளத்துறையினர் படகுகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடற்படையினரும் கடலோரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், தக்கார் ரா.அருள்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?
ஐ.பி.எல் மெகா ஏலத்தில் வரும் வீரர்கள் முழு விவரம் : யார் யாருக்கு டிமாண்ட்!
