கோடைக்காலம் வந்துவிட்டால், இல்லத்தரசிகளுக்கு இரட்டிப்பு வேலைதான். விடுமுறையில் இருக்கும் குழந்தைகளைக் கண்காணிப்பது ஒருபுறம் என்றால், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத உணவு வகைகளைத் தயாரிப்பது இன்னொரு சவால். அப்படிப்பட்ட நேரத்தில் உதவும் இந்த வெண்டைக்காய் – மாங்காய்ப் பச்சடி. இது குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவாகவும் அமையும்.
என்ன தேவை?
- வெண்டைக்காய் – 7
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – ஒன்று
- பச்சை மிளகாய் – 2
- மாங்காய் – சிறிய துண்டு
- மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
- வெல்லம் – சிறிய துண்டு
- கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைக்க…
- தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 3, சீரகம் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெண்டைக்காய், சின்ன வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், வெண்டைக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெண்டைக்காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும். வெண்டைக்காய் வெந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். பச்சடி கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லம் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதித்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் கலந்து இறக்கவும்.