அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புகளில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை தெரிவித்த மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அவற்றை சரிசெய்ய வேண்டும் என மருத்துவமனை டீன்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன்களுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்!
அதில், “அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், நடைமுறைகள் சரியாக பின்பற்றபடாமல் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
நோயாளிகள் பயன்படுத்தும் நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், காத்திருப்பு மேஜைகள் உடைந்தும், சேதமடைந்தும், துருப்பிடித்த நிலையிலும் காணப்படுகிறது. கழிப்பறைகள் அசுத்தமாக காணப்படுகின்றன.
பல இடங்களில் கதவுகள், ஜன்னல்கள், உடைந்து, சேதமடைந்த நிலையில் உள்ளன. தரைகள் சுத்தமாக இல்லை.
நோயாளிகள் நலனுக்காக, அரசு சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அதற்கான உரிமம் பெறப்படாததாலும், பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
மருத்துவமனைக்கு வரும் நோயாளியிடமிருந்து, மற்றொரு நோயாளிக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு, பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம்.
நோயாளிக்கு வழங்கப்படும் உணவின் சுகாதாரத்தையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனை சமையலறைகளில் சுத்தமான தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
உணவு மற்றும் தண்ணீர் சேமிப்பு வசதிகளைச் சரிபார்த்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்புத் தரங்கள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாதந்தோறும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
காலாவதி மருந்துகள் இருப்பில் வைக்க கூடாது!
சுகாதாரமான குடிநீர் வழங்குவதுடன், நீர்த்தேக்க தொட்டிகள் துாய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் உள்ளிட்டவை தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்துகளின் காலாவதி தேதியை சரிபார்த்து, காலாவதியான மருந்துகள் இருப்பில் இல்லை என்பதை டீன்கள் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு, சக்கர நாற்காலிகள் உள்ளிட்டவை வாயிலாக, அவர்களை அழைத்து செல்வதற்கு, உதவியாளர்களையும் நியமிக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எந்த முன்னேற்றமும் பார்க்கல!
மேலும் இதுதொடர்பாக மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணிக்கும், சுப்ரியா சாஹு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் (IMH) பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அங்குள்ள சிகிச்சை பெறுபவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அப்போது, அசைவ உணவுகளை வழங்குதல், சமையலறையை நவீனமயமாக்குதல், நோயாளிகளுக்கு உணவு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், IMH மற்றும் பனியன் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், கூடுதல் பராமரிப்பாளர்கள், உள்கட்டமைப்பு வடிவமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் கடந்த 17ஆம் தேதி IMHக்கு சென்றபோது, எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
குறிப்பாக, பெண் காப்பகவாசிகள், தங்களது முடியை கூட சரியாக திருத்தம் செய்யாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. இதன் வாயிலாக, அவர்களை முறையாக பராமரிக்காதது தெரியவருகிறது.
அதேபோல, பெண்களுக்கான உள்ளாடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்னும் வாங்கப்படவில்லை.
மாதம் ஒரு முறை அறிக்கை தர வேண்டும்!
அங்கு, உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கான வசதிகள் மற்றும் போதியளவில் ஆடைகள் வழங்க வேண்டும்.
வார்டுகளின் சீரமைப்புத் திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள சுப்ரியா, மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவு தரம் ஆகியவற்றை மாதம் ஒரு முறை கண்காணித்து, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அர்ணவ்!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை: அரசு ஆணை வெளியீடு!