அரசியல் கேள்விகள் வேண்டாம் – அமைச்சர் எல் முருகன்

Published On:

| By Pandeeswari Gurusamy

‘பராசக்தி’ திரைப்படம் குறித்த கேள்வி எழுப்பிய நிலையில் அரசியல் கேள்விகள் இப்போது வேண்டாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நீலகிரி தொகுதி பள்ளிகளில் நடத்தப்பட்ட 2025 விளையாட்டுத் திருவிழாவின் நிறைவு விழா இன்று (டிசம்பர் 25) ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம் பள்ளியின் டாக்டர் பி.எம்.கே. ஜூபிலி ஹாலில் நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றி, நாடு முழுவதும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுடன் உரையாடினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை பி.டி. உஷா, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “இளைஞர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற போட்டிகள் அவசியம். உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்த இவை உதவும். பிரதமர் மோடி, அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு நன்றி. பி.டி. உஷா போன்றோர் இளம் தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கின்றனர்” என்றார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி, 11-ம் வகுப்பு மாணவி நேஷிக்காவுடன் உரையாடினார். மாணவி நேஷிக்கா, “விளையாட்டுப் பயிற்சி எனது படிப்பை பாதிக்கவில்லை. பள்ளி முடிந்த பிறகு தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி செய்கிறேன். கபடியை விரும்புகிறேன், ஏனெனில் அது தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு” என்று கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டுகளுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன், “இந்த விளையாட்டு திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிரதமர் வீரர்களை ஊக்குவித்தார். இந்தியா தற்போது உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கி வருகிறது. வரவிருக்கும் காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராவதற்காகவே இத்திட்டம். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு சர்வதேச அரங்குக்கு அழைத்துச் செல்வதே இலக்கு” என்றார்.

ADVERTISEMENT

அப்போது நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்பட தணிக்கை சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு,அரசியல் கேள்விகளுக்கு இப்போது பதில் இல்லை. அற்புதமான நிகழ்வு இதை போடுங்கள் என்று கூறிச் சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share