தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடநல் திருநாடு’ என்ற வரி விடுபட்டதற்கு ஆளுநர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (அக்டோபர் 19) கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தூர்தர்ஷன் நடத்திய இந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது குழந்தைகள் தெரியாமல் தவறு செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது. சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்?
சென்னை மழை, வெள்ளத்தை திமுக அரசு சரியாக கையாளவில்லை. சரியான திட்டமிடல் இல்லை. இதையெல்லாம் மக்களிடம் இருந்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள். அனைத்தையும் அரசியலாக்குவது தவறு. இது ஒன்றும் 1960-கள் இல்லை, திமுக நினைக்கும் அரசியல் எல்லாம் இப்போது செய்ய முடியாது. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
இந்திக்கு நாம் ஆதரவாளர்களும் கிடையாது, அதேவேளையில் எதிர்ப்பாளர்களும் கிடையாது. சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக உள்ளது. திமுக நிர்வாகிகள் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்க மாட்டோம் என்று பள்ளியை இழுத்து மூட தயாரா? மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு அடி, உதை… சமூக நலத்துறை விசாரணை!
உங்கள் நாட்டுக்கு போங்கள்… தமிழரிடம் கனடிய பெண் இனவெறி பேச்சு!