தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… உதயநிதி பதவி விலகுவாரா? – எல்.முருகன் காட்டம்!

Published On:

| By Selvam

சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 25) , ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை’ தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, சில வார்த்தைகள் தவறாக பாடப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. டெக்னிக்கல் கோளாறு தான். மைக் வேலை செய்யாததால் இரண்டு, மூன்று இடங்களில் சரியாக குரல் கேட்கவில்லை. எனினும் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடப்பட்டது” என்று விளக்கமளித்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில்,  அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (அக்டோபர் 25) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால், இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது.

ADVERTISEMENT

ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் ஸ்டாலின்.

மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?

தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது உதயநிதி ஸ்டாலினை ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீது பழி சொல்லும் இவர்கள், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?

இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்’’ என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை இவர்கள் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும். ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல் – உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா?

சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இர்பான் படிக்கணும் … ஷாலினி பிரசவத்தின் போது அஜித் குமார் செய்த காரியம் தெரியுமா?

விஜய் மாநாடு… மிரட்டும் டிராபிக்… மாறும் ரூட்டுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share