மத்திய இணையமைச்சர் எல்.முருகனை, எம்.பி., டி.ஆர்.பாலு அன்ஃபிட் என்று சொல்லியதற்கு பாஜக தலைமை காட்டமாக பதிலளித்ததுள்ளது.
மக்களவையில் இன்று (பிப்ரவரி 6) கேள்வி நேரத்தின்போது, வெள்ள நிவாரணம் கேட்டு பேசிய திமுக எம்.பி டி ஆர் பாலு, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குறுக்கிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த எம்பி டி.ஆர்.பாலு, “நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள்? தயவு செய்து அமருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் சில ஒழுக்க நெறிகளை தெரிந்திருக்க வேண்டும். எம்.பி.யாக இருக்க நீங்கள் தகுதியற்றவர். மத்திய இணை அமைச்சராக இருக்கவும் தகுதியற்றவர். விவாதத்தில் பங்கேற்க உங்களுக்கு தைரியம் இல்லை. ‘யு ஆர் அன்ஃபிட்’. தயவு செய்து அமருங்கள்” என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சரை அவமதித்து விட்டதாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுந்து, “ஒரு அமைச்சரை எப்படி தகுதியற்றவர் என்று சொல்ல முடியும்? அதுவும் ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்கிறீர்கள். திமுக அரசு தகுதியற்றது” என்றார்
தொடர்ந்து இரு கட்சி எம்.பி.களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, “மக்களவையில் நான் சாதாரணமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன் ஏதோ பேச ஆரம்பித்தார். நான் பேசுகிறேன், அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும் நீங்கள் உட்காருங்கள் என்றேன்.
அவர் என்ன பேசினார் என்று என் காதில் விழவில்லை. ஆனால் அவர், நாங்கள் எல்லாம் செய்து விட்டோம். மத்திய அரசு செய்ய வேண்டியதை செய்து விட்டது. அதை நீங்கள் தான் முறைப்படுத்தி செய்யவில்லை என்று சொல்லியதாக தோழர்கள் என்னிடம் சொன்னார்கள்.
ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்து பேசிக் கொண்டிருக்கும்போது என்னை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகவே குறுக்கிட்டு பேசிக் கொண்டிருந்தார் முருகன்.
நானும் ஆ.ராசாவும் தமிழர்கள் என்ற முறையில் கேள்வி கேட்டோம். எங்களுக்கு பதில் சொன்ன அமைச்சர் சரியாக பதில் சொல்லவில்லை. அவர் வேறு மாநிலத்துக்காரர்.
ஆனால் நம்ம மாநிலத்தைச் சேர்ந்த முருகன், தொடர்ந்து குறிப்பிட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
அதனால் தான் தோழர்கள் எல்லாருமே எழுந்து, நீங்கள் எதற்கு குறுக்கிடுகிறீர்கள் என்று கூச்சல் போட்டனர்.
மக்களவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையாக டி.ஆர்.பாலு என்ன பேசினார் என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். நானும் சபாநாயகரிடம் கேட்டேன். ஆனால் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட எல்லாருமே முருகனுக்கு ஆதரவாக பேசினார்கள்.
இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு தமிழர் என்ற முறையில் கூட முருகன் நடந்து கொள்ளவில்லை. அவர் தலித் அமைச்சர், அவரை ஏன் உட்கார சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
இவர்கள் தலித் கார்டு போடுகிறார்கள். ஆனால் கேள்வி கேட்டவரும் தலித் என்பதை மறந்து விட்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
திமுக எம்பி ஆ ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய பேரிடர் நிதியின் கீழ் ஏதேனும் நிதி வெளியிடப்படுமா என்று உள்துறை இணை அமைச்சரிடம் நான் ஒரு துணைக் கேள்வியை கேட்டேன். ஆனால் அவர் அளித்த பதில் முற்றிலும் தவிர்க்க கூடியதாகவும் பொறுப்பற்றதாகவும் இருந்தது. இதனால் நாங்கள் சற்று கலக்கமடைந்தோம்.
இந்த விவாதத்தின் போது டி.ஆர்.பாலு எம்.பி. சில கேள்விகளை கேட்க விரும்பினார். அதை மத்திய இணை அமைச்சர் முருகன் தடுத்தார். எனவே நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் ஏனெனில் நீங்கள் மாநில நலனுக்கு எதிரானவர் என்று நாங்கள் சொன்னோம்” என கூறினார்.
இந்நிலையில் டி.ஆர்.பாலுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி டி.ஆர்.பாலு இழிவான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல.
அமைச்சர் எல்.முருகன் மீதான டி.ஆர்.பாலுவின் கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் மோடி சமூக நீதிக்காக உண்மையாக பாடுகிறார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியுள்ளார். பல தசாப்தங்களாக மத்திய அரசில் அங்கம் வகித்தும் திமுகவால் இதை செய்ய முடியவில்லை.
எல்.முருகன் அர்ப்பணிப்புடன் மக்கள் சேவை செய்து வருகிறார். இதை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே, எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும்” என்று காட்டமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுபோன்று பாஜக தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில், “உங்கள் தலைவர் ஸ்டாலின் தகுதியானவரா என இதை பார்த்து செக் செய்து கொள்ளுங்கள்” என்று ஃபிட்னஸ் சர்ஃபிகேட் என்ற பெயரில் ஒரு சான்றிதழ்களை வெளியிட்டுள்ளனர்.
Hello @TRBaaluMP, check if your leader @mkstalin is FIT enough to be @CMOTamilNadu.
Here’s a report for your reference 👇 pic.twitter.com/VNLjnIU3Sp
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 6, 2024
அதில், சமூக நீதி – இல்லை, ஊழல் – உச்சம், வளர்ச்சி – இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – அதிகரிப்பு, வெளிநாட்டில் இருந்து முதலீடுகள்- பூஜ்ஜியத்தில் இருந்து குறைவு, பேச்சு சுதந்திரம் – இல்லை, மதுப்பழக்கம் – ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பு, மருத்துவ உள்கட்டமைப்பு – மோசம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தகுதியற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் நிலை மேலும் மோசமடையாமல் இருக்க உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் மாநில பாஜக தலைமை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மத்திய அமைச்சராக இருக்க எல்.முருகனுக்கு தகுதியில்லை: டி.ஆர்.பாலு ஆவேசம்!
தமிழ்நாட்டின் இன்றைய அதிக மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இதுதான்!