அனைத்து நகரங்களிலும் கட்டடங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்ற நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் மரங்கள் நடுவதற்காகக் கட்டடங்களை இடிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
உலகில் மாசுபடிந்த முதல் பத்து நகரங்களில் ஏழாவது இடத்தில் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் இருக்கிறது. வாகனப் புகை, நிலக்கரித் தொழிற்சாலை, உடல்தகனப் பகுதி என நகரம் முழுவதுமே புகை மண்டலமாகத்தான் காட்சியளிக்கும். இதனால், நகரைப் பசுமையானதாக மாற்ற மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் செளத்ரி நகரின் மையப்பகுதியாக இருக்கும் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, ‘ஆக்ஸி மண்டலம்’ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கெனவே, இந்த இடத்தில் பொருளாதார மண்டலம் அமைக்க அரசு திட்டமிட்டிருந்தது. ஏனெனில், அந்த இடத்தின் மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய். இந்த விஷயம் மாவட்ட ஆட்சியருக்கும் தெரியும். இருப்பினும், சுற்றுசூழலுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கைச் சந்தித்து, நிலைமையை விளக்கி ஆக்ஸி மண்டலம் உருவாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளார்.
தற்போது சுமார் 70 பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. நல்ல நிலையில் இருந்த ஒரு சில கட்டடங்களில் அருங்காட்சியங்கள், இயற்கைப் பொருள்கள் கண்காட்சி போன்றவை ஏற்படுத்த வேலைகள் நடந்துவருகின்றன. ராய்ப்பூர் முழுவதும் 28 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளின் புகை வெளியீட்டு அளவு முறைப்படுத்தப்பட்டு, விதிமீறல்களுக்குக் கடும் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நகர் முழுவதும் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை மாவட்ட ஆட்சியரே அகற்றுகிறார்.
‘நான் இன்று செய்தால்தான், மக்கள் நாளைச் செய்வார்கள்’ எனக் கூறியுள்ளார். ‘அடுத்த 10 மாதங்களில் நாம் நம் இலக்கை அடைய வேண்டும்’ என மக்களை ஊக்கப்படுத்தி வருகிறார். தற்போது இவரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.