ADVERTISEMENT

த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!

Published On:

| By Balaji

இந்தியா – இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பெண்கள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நாக்பூரில் நேற்று (ஏப்ரல் 6) முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி வீராங்கனைகள் நிதானமாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கினர்.

ADVERTISEMENT

இந்திய அணி வீராங்கனைகள் வழங்கிய கூடுதல் ரன்கள் ஒருபுறம் அதிகரிக்க ரன் வேகமும் கூடியது. ஆனால், இந்திய வீராங்கனை பூனம் யாதவ் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதல் மூன்று வீராங்கனைகளின் விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம் இந்திய அணி வசம் போட்டியை மாற்றினார். இருப்பினும் அதன் பின்னர் களமிறங்கி சிறப்பாக விளையாடிய ஃப்ரான் வில்சன் 45 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

இருப்பினும் இங்கிலாந்து அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் தொடர்ச்சியாக 208 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். கடந்த தொடரில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததை போல் இந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைச் சந்திக்குமோ என்ற சந்தேகம் இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய ஸ்மிர்தி மந்தானா 86 ரன்களைச் சேர்த்து வெற்றிக்குப் பாதை அமைத்தார்.

ADVERTISEMENT

இருப்பினும் கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் சேர்த்தால் வெற்றி, என 9 விக்கெட் இழந்த நிலையில் இந்திய அணி விளையாடியது. விக்கெட்டினை இழந்தால் ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையில் இருக்க இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share