இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணி பல்வேறு கோப்பைகளைக் கைப்பற்றும் வகையில் சிறப்பாக அணியை வழி நடத்திச் சென்றவர். கடந்த 2014ஆம் முதல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு மட்டும் தலைமை ஏற்று நடத்திவந்த அவர், சமீபத்தில் அந்த பொறுப்பில் இருந்து முழுவதும் விலகினார். ஒருநாள், டி-20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக இடம்பெறும் தோனி தற்போது துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து புதிய அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.
எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி என்ற பெயரில் இந்தப் புதிய அகாடமி தொடங்கவிருப்பதாக பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் அறிவித்துள்ளது. படிப்படியாக இந்த கிரிக்கெட் அகாடமியை அரபு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தோனியை விளம்பர தூதுவராக அறிவிக்க உள்ளதாகவும் பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்திவருகிறார்கள். அந்த வரிசையில் தோனியும் இணைந்துள்ளார்.
இலங்கை தொடரில் இடம்பெற்றுள்ள தோனி வருகிற 20ஆம் தேதி முதல் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளார். அதற்குப் பிறகு அவர் துபாய் சென்று இதற்கான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









