ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரின் காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி.
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசிக் காலிறுதிப் போட்டி இன்று (ஜனவரி 26) நடைபெற்றது. அதில் இந்திய, வங்கதேச அணிகள் மோதின. இதற்கு முன்னர் இந்திய அணியை ஆசியக் கோப்பையில் வங்கதேச அணி வீழ்த்தியது.எனவே இந்தப் போட்டி இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா, மன்ஜாட் கல்ரா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். கல்ரா 9 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கேப்டனுடன் ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. ப்ரித்வி ஷா 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹார்விக் தேசை 34 ரன்களும், ரியான் பாரஜ் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய கில் 86 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் சீரான இடைவேளையில் இந்திய அணி விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களைச் சேர்த்தது.
266 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்களால் சிறப்பான தொடக்கத்தைப் பெற முடியாத அளவுக்கு இந்தியப் பந்துவீச்சு கட்டுக்கோப்புடன் இருந்தது. ஷிவம் பங்கஜ் மவியும் இஷான் சந்திரநாத் போரலும் முதல் 10 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே கொடுத்தனர். மவி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு கமலேஷ் நகர்கோடியும் ரியான் பராகும் வீசத் தொடங்கினார்கள். இவர்கள் இருவரும் மிகவும் சிக்கனமாக வீசியதில் வங்கதேச அணி மேலும் திணறியது. பிறகு இந்திய அணியின் நட்சத்திர பவுலர் அனுகூல் ராய் பந்து வீசத் தொடங்கியதும் வங்கதேச அணி வீரர்கள் மேலும் திணற ஆரம்பித்தனர்.

மொஹமத் நய்ம் (12), கேப்டன் சைப் ஹாசன் (12) இருவரும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் பினாக் கோஷ் 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனுகூல் ராய் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைக் கைப்பற்றத் தொடங்கினர். அமினுள் இஸ்லாம் (3), மகிதுள் இஸ்லாம் (10), ஓனிக் (0), ஹசன் முஹ்முத் (0) என சீராக விக்கெட்டுகள் விழத் தொடங்கியது. 9 விக்கெட் வீழ்ந்த பின்னர் கடைசி பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ராபில் ஹோக் தொடர்ந்து அதிரடியாக இரண்டு சிக்சர்களை அடித்தார். இருப்பினும் மறுமுனையில் நயீம் ஹாசன் (11) நகர்கோடி பந்தில் போல்ட் ஆகி வெளியேறியதால் இந்திய அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது. வரும் 30ஆம் தேதி இந்த அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.
