நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் சாலைக் கட்டமைப்புப் பணிகளில் தொய்வு காணப்படுகிறது.
நாடு முழுவதும் 16,420 கிலோமீட்டர் தொலைவுக்கான சாலை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9,700 கிலோமீட்டர் தொலைவுக்கான சாலைக் கட்டமைப்புப் பணிகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமும், 6,000 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டமைப்புப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், 720 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டமைப்புப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமும் மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், இவற்றின் பணிகள் நாடு முழுவதும் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடிகளும், நிலம் கையகப்படுத்துதலில் உள்ள தடைகளும்தான் தாமதத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இருப்பினும் தேர்தல் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால் சாலைக் கட்டமைப்புப் பணிகளுக்கான ஏலங்களைத் துரிதப்படுத்த அனைத்து ஆணையங்களும் முயற்சி செய்து வருகின்றன. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும், அடுத்த ஆண்டில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து *கிரிசில்* நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு ஏலங்களை நடுத்தர நிறுவனங்கள் பல கைப்பற்றியுள்ளன. சாலைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி உரிய நேரத்தில் அந்நிறுவனங்களுக்குச் சென்றடையவில்லை. அதனால் பல பகுதிகளில் தொய்வு காணப்படுகிறது’ என்று கூறியுள்ளது.
