தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பொழிந்து வருகிறது.
இதன்காரணமாக அங்குள்ள அருவி மற்றும் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு தடுப்பு வரை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஏற்கனவே அருவியில் குளிக்க 2 நாட்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையானது இன்றும் தொடர்கிறது.

அதே போன்று கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, பெரியகுளம் கும்பக்கரை அருவி மற்றும் போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் அணைகளில் ஆர்ப்பரித்து பாயும் வெள்ளம் காரணமாக குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தின் மேகமலையில் உருவாகும் வைகையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான மூல வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பாலத்தில் நின்றபடி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
