தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்த நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ஜூலை மாத கடைசியிலேயே அவர் ராஜினாமா கடிதத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பிய நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தனது மகளிர் ஆணைய உறுப்பினர் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட மறுநாளே… அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9.45 மணிக்கெல்லாம் குஷ்பு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கமலாலயத்தில் கால் பதித்திருக்கிறார் குஷ்பு. அந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அவரது முகத்திலும் கண்களிலும் தெரிந்தன.
குஷ்புவை சுற்றி பாஜகவின் பெண் பிரமுகர்கள் சூழ்ந்து கொள்ள அவர்களோடு மிக மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். சுதந்திர தின விழா முடிந்ததும் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு
“கட்சி சார்பாக உழைக்க வேண்டும் பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. எனது கவனம் முழுவதும் இனி அரசியலில் தான். பாரதிய ஜனதாவுக்காக பணியாற்றுவதில்தான் எனக்கு முழு திருப்தி. எனக்கு பேச்சுத் திறன் உள்ளது. பிரதமர் மோடியையும் எனது கட்சியையும் ஆதரித்து என்னால் பேச முடியாத நிலையில் இருந்தேன்.
அதனால் மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டேன். இனிமேல் தான் என்னுடைய விளையாட்டு ஆரம்பிக்கப் போகிறது” என்று புதிய தெம்போடு செய்தியாளர்களிடம் பேசினார் குஷ்பு.
குஷ்பு ராஜினாமா செய்தது ஏன்? அதை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையம் ஏற்றுக் கொண்டதன் பின்னணி என்ன?
இது குறித்து பாஜகவின் சென்னை, டெல்லி வட்டாரங்களில் விசாரித்தோம்.
”தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவராக இருந்த ரேகா இங்கே உறுப்பினராக இருக்கும் வரைக்கும் எந்த விதமான கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்று கறாரான உத்தரவிட்டிருந்தார். இது குஷ்புவுக்கு கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் கமலாலயத்துக்குள்ளேயே கால் பதிக்க முடியவில்லை
அது மட்டுமல்ல…. குஷ்பு இன்றைக்கும் அரசியல் உலகிலும் சினிமா உலகிலும் மிகுந்த பிசியானவர். குறிப்பாக சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தில் குஷ்புவுக்கு இன்னும் பிசியான மார்க்கெட் உள்ளது.
சினிமா நிகழ்ச்சி என்றாலோ சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலோ குஷ்பு, அவரது உதவியாளர், அவரது ஒப்பனையாளர் என அவரது ஒட்டு மொத்த குழுவுக்கும் பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட், ஐந்து நட்சத்திர தங்கும் வசதி…இதெல்லாம் தாண்டி குஷ்புவுக்கு ஒரு நாள் சம்பளமே குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் என்பது தான் இன்றைய அவரது மார்க்கெட் நிலவரம். தவிர சினிமா தயாரிப்பாளராகவும் குஷ்பு உள்ளார்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்த நிலையில் குஷ்புவால் தனது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டு தேதி கொடுத்து இருந்தால், சரியாக அதே தேதியில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சம்பவம் நடந்திருக்கும். உடனடியாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற வகையில் குஷ்பு அங்கே செல்ல வேண்டியிருக்கும். இப்படி பல மாநிலங்களுக்கும் குஷ்புஅனுப்பப்பட்டார்.
இத்தனையையும் இழந்து பெற்ற அந்த மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கென எந்த சிறப்பு சலுகைகளும் இல்லை. சம்பளம் சில ஆயிரங்கள்தான். விமானப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட எக்கனாமிக் வகுப்பில் தான் டிக்கெட் புக் செய்யப்படும். இப்படி எல்லா வகையிலும் இழப்புகளையே சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தான் குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிக்கு பதிலாக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே அரசு பணியிலும் ஈடுபடும் வகையில் மத்திய அரசின் முக்கியமான வாரிய தலைவர் பதவி தனக்கு வழங்குமாறு அவர் வேண்டுகோள் வைத்திருந்தார்.
உதாரணத்திற்கு தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு ஒரு போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தான் இந்தப் பதவியை வெங்கடேசனுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
ஒரு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்ற இந்த ஆணையத் தலைவர் பதவிக்கு அரசு கார், போலீஸ் பாதுகாப்பு, நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் எந்த மாவட்டத்திலும் சென்று தூய்மை பணியாளர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்கிற அதிகாரம், ஆளுநர், கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்கிற அதிகாரம் அந்த பதவிக்கு உண்டு.
இப்படிப்பட்ட ஒரு பதவி தனக்கு வேண்டும் என்று குஷ்பு காய்நகர்த்தி வந்தார்.
மகளிர் ஆணைய தலைவர் ரேகாவின் நிபந்தனைகளால் தமிழ்நாடு பாஜகவில் தன்னை கிட்டத்தட்ட மறந்துவிடும் நிலைமை உருவாகுவதை குஷ்பு உணர்ந்தார். உடல்நிலை காரணங்களை காட்டி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு குஷ்பு செல்லவில்லை என்றாலும் இந்த மன ரீதியான காரணமும் உண்டு.
தமிழக பாஜகவில் குஷ்பு அரசியல் செய்ய இயலாத இந்த இடைவெளியில்தான் நடிகர் சரத்குமாரும், நடிகை ராதிகாவும் பாஜகவில் சேர்ந்தனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா போட்டியிட்டார்.
குஷ்பு தென் சென்னை கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு இல்லை. சமீப மாதங்களாக கட்சியில் சரத்குமார் மற்றும் ராதிகாவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் கருதினார் குஷ்பு. திருப்பூரில் சமீபத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழிசை அழைக்கப்படவில்லை. ஆனால், சரத்குமார் மேடையில் ஏற்றப்பட்டார். காலை முதல் மாலை அவர் மேடையில் அமர்ந்திருந்தார்.
கட்சிக்கும் தனக்குமான இடைவெளி தொடர்ந்தால் குஷ்புவின் இடத்தை ராதிகா கைப்பற்ற கூடும் என்ற எச்சரிக்கையும் குஷ்புவின் நண்பர்களால் அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, கிஷன் ரெட்டி உள்ளிட்ட பாஜகவின் தேசிய நிர்வாகிகளுடன் எளிதில் பேசும் செல்வாக்கு பெற்றவர் குஷ்பு. அந்த வகையில் அவர்களிடம் குஷ்பு ஒரு வேண்டுகோளை வைத்திருந்தார்.
தான் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு தேசியத் தலைவர்களுக்கு குஷ்பு அழுத்தம் கொடுத்து அதன் பிறகே… இந்த ராஜினாமா ஏற்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
“இனிமேல்தான் என்னுடைய விளையாட்டு ஆரம்பிக்கப் போகிறது” என்று குஷ்பு நேற்று சொன்னது தேசிய தலைமையில் இருந்து குஷ்பு பெற்ற உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அண்ணாமலை வெளிநாடு செல்ல இருக்கிற நேரத்தில் குஷ்புவின் இந்த ரீ என்ட்ரி பாஜகவில் பல்வேறு யூகங்களை உலவ விட்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
Share Market : வாரத்தின் கடைசி நாள்… ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த EOS-08 செயற்கைக்கோள்!
உள்ளாட்சித் தேர்தல்… 2026 சட்டமன்றத் தேர்தல் : அதிமுக செயற்குழுவில் முக்கிய தீர்மானம்!