நடிகையும் காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக, பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைக்கிறது.
ஏற்கனவே திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து குஷ்பு கருத்து தெரிவித்தபோது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் அது அவரது அரசியல் பாதை பாஜகவை நோக்கி திரும்புவதற்கான தொடக்கப்புள்ளி என்று அப்போது சிலர் யூகித்தனர். அப்போது தன்னை தொடர்புகொண்ட பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி நான் பதில் கூற மாட்டேன் என்று தொடர்ந்து மௌனம் காத்து வந்தார் குஷ்பு. ஆனால் இன்று (அக்டோபர் 12) டெல்லியில் பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டதும் குஷ்பு தொடர்ந்து காங்கிரஸ் நிகழ்ச்சிகளை பாராமுகமாகவே இருந்து வந்தார். அண்மையில் தமிழகத்துக்கான புதிய பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தபோது காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் குஷ்பு தலைகாட்டினார். அதன் பிறகு நேற்று திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் சங்கமம் நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் சங்கமம் நடந்துகொண்டிருக்கும்போதே குஷ்பு பாஜகவில் சங்கமம் என்ற தகவல் காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியவந்தது.
தமிழக காங்கிரஸில் சிலரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “குஷ்பு ஆட்சி அதிகாரமுள்ள கட்சியில் இடம் வேண்டும் என்று பேசி முடித்துவிட்டார். அதற்கான பாதைக்காகத்தான் புதிய கல்விக்கொள்கை ஆதரவுநிலை எடுத்தார். தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியைவிட மாநில அரசியலில்தான் குஷ்புவுக்கு கவனம் இருந்தது. தமிழகத்தில் காங்கிரஸில் வலிமையான பதவி கேட்டார். ஆனால் அதற்கு மேலிடம் உடனடியாக சம்மதிக்கவில்லை. குஷ்பு ஒரு முடிவெடுத்துவிட்டார் என்பதை அறிந்த அவருக்கு நெருக்கமான முன்னாள் தலைவர் இளங்கோவனும் குஷ்புவிடம் பேசியிருக்கிறார்.
அண்மையில் காலமான வசந்தகுமார் வகித்த செயல் தலைவர் பதவியைக் கூட பேசி வாங்கித் தருவதாக இளங்கோவன் சொல்லியும் குஷ்பு சம்மதிக்கவில்லை. அதற்கு மேல் யாரும் அவரோடு மல்லுக்கட்ட விரும்பவில்லை” என்றனர்.
நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட குஷ்புவிடம், “நீங்கள் பாஜகவுக்கு போவதாக தகவல் வருகிறதே?’…. ‘நீங்கள் இப்போது காங்கிரஸில் இருக்கிறீர்களா?” என்ற கேள்விகளை திரும்பத் திரும்ப செய்தியாளர்கள் கேட்டபோது, “நோ கமெண்ட்ஸ். கருத்து சொல்ல விரும்பல” என்ற பதிலை மட்டுமே சொல்லிக்கொண்டு விமான நிலையத்துக்குள் சென்றார்.
தமிழக பாஜக தரப்பிடம் இதுகுறித்து கேட்டபோது, “குஷ்பு டெல்லியில் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்” என்றனர். பாஜகவில் தமிழகத்தில் ஏற்கனவே போதுமான அளவு துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில், குஷ்புவுக்கு என்ன பதவி வழங்குவார்கள் என்ற குழப்பம் பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
**-வேந்தன்**
