கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவின்போது சமூகவலைதளங்களில் கிடுகிடுவென பிரபலம் ஆனார் மோனாலிசா போஸ்லே. பூ விற்பனைக்காக வந்தவருக்கு, சோஷியல் மீடியா உலகில் பூத்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த அளவுக்கு அவர் ‘வைரல்’ ஆனார். உடனடியாக, இந்திப்படமொன்றில் அவர் நாயகியாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பிறகு சனோஜ் மிஸ்ராவின் ‘தி டயரி ஆஃப் மணிப்பூர்’ படத்தில் அவர் நாயகியாக நடிப்பதாகச் சொல்லப்பட்டது.
பிறகு, மோனாலிசா பற்றிய தகவல்களே இல்லை.
இந்த நிலையில், மீண்டும் மோனாலிசாவை ரசிகர்களுக்கு நினைவூட்டியிருக்கிறது மலையாளத் திரையுலகம். இயக்குனர் பினு வர்கீஸின் ‘நாகம்மா’ படத்தில் நடிகர் கைலாஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் மோனாலிசா.
இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. அதிலும் அதே புன்னகையோடு ‘பளிச்’சென்று வலம் வந்தாராம் மோனாலிசா.
போகிற போக்கைப் பார்த்தால், ‘ஒரு புன்னகைப் பூவே’ என்று இவரை முன்வைத்து ஒரு பாடலே உருவானாலும் ஆச்சர்யமில்லை..!
