நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (மார்ச் 22) நடைபெற்றது. Rama Rao Opposes Delimitation
இந்த கூட்டத்தில் பேசிய பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் பேசும்போது,
“ஒன்றிணைந்து போராட வேண்டும்!
நமது அடையாளம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதற்கு தமிழக மக்களும் திராவிட இயக்கமும் எங்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாம் வாழ்ந்து வருகிறோம். நிர்வாகம், வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றில் தென் மாநிலங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. ஆனால், மத்திய அரசு தனது அரசியல் அதிகாரத்தால் தென் மாநிலங்களை தண்டிக்கிறது.
இந்த நேரத்தில் நாம் தொகுதி மறுவரையறை பிரச்சனை குறித்து பேசவில்லை என்றால், வரலாறு நம்மை மன்னிக்காது. மத்திய அரசின் சமத்துவமின்மையான நடவடிக்கைக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களும் இந்தியாவின் ஜிடிபி-யில் 36 சதவிகிதம் பங்களிக்கின்றன. ஆனால், மத்திய அரசு எங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. தென் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பது புதிதான ஒன்றல்ல. அவர்கள் பல ஆண்டுகளாக நம்மை வஞ்சித்து வருகிறார்கள்.
சட்டமன்ற தொகுதிகளை முதலில் உயர்த்தட்டும்!
புல்லட் ரயில் சேவை வட மாநிலங்களில் தான் முதலில் செயல்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இந்தியாவின் ஜனநாயகம் என்பது பொருளாதாரம் வளர்ச்சி, நிர்வாகம், ஆகிவற்றால் கட்டியெழுப்பப்பட்டது. மக்கள் தொகையால் அல்ல.
தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். அவரது பேச்சை நாங்கள் எப்படி நம்புவது?
தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்ட பிறகு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சட்டமன்ற தொகுதிகளுக்கான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு கூடுதல் சட்டமன்ற தொகுதிகள் ஏற்படுத்தப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இன்றுவரை அதை செய்யவில்லை.

ஆனால், ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையான மாநிலங்களில் மட்டும் மறுவரையறை செய்வார்கள். மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்தால், தென் மாநிலங்களுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எங்களின் குரல் நசுக்கப்படக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றால், முதலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்தட்டும்” என்று கே.டி.ராமாராவ் தெரிவித்தார். Rama Rao Opposes Delimitation