அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அக்கட்சியினரை போலீசார் இன்று (நவம்பர் 7) கைது செய்தனர்.
தமிழகத்தில் அருந்ததியர் சமூக மக்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடத்த இன்று திட்டமிடப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு பேரணி தொடங்க முற்பட்டபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேரணி செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும், அங்கு கூடியிருந்த புதிய தமிழகம் கட்சி தொண்டர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் காவல்துறையினருடன் கிருஷ்ணசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார் கிருஷ்ணசாமி.
தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தொண்டர்களும் சாலையில் அமர்ந்து காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் ராஜரத்தினம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி பேரணிக்கு அனுமதி கேட்டோம். அனுமதி கொடுத்துவிட்டார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து தொண்டர்கள் இன்று குவிந்தபிறகு பேரணி நடத்த அனுமதி இல்லை என்கிறார்கள். எங்கள் கட்சியினரை கைது செய்கிறார்கள்.
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டால் பறையர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை மக்களுக்கு தெரியக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் எங்கள் போராட்டத்தை தடுக்கிறார்கள்” என்றார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணசாமியை கைது செய்த காவல்துறையினர், போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…