ஈரோடு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இதற்காக 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று ஈரோடு மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலர் கிருஷ்ணன் உண்ணி செய்தியாளர்களிடம் பேசும்போது, “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்போடு கொண்டு செல்லப்படுகிறது.
பதட்டமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்துதலின்படி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 796 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதில் தொடர்புகொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்