கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வழக்கு : காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி!

Published On:

| By Kavi

கிருஷ்ணகிரி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை விசாரணை சரியான முறையில் இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிறையில் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார் சிவராமன்.
இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் மற்றும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 12) பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் அறிக்கையை குறித்து பேசிய நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர்” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து, “தற்கொலை செய்துகொண்ட சிவராமனுக்கு எப்படி எலிபேஸ்ட் கிடைத்தது? யாரிடம் இருந்து வாங்கினார் என்று கூட காவல்துறை இன்னும் விசாரணை செய்யவில்லையா? காவல்துறையின் விசாரணை சரியான முறையில் இல்லை” என்று அதிருப்தி தெரிவித்தனர்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வழக்கை காவல்துறை விசாரிக்கும் என்று தெரியவில்லை என தெரிவித்த நீதிபதிகள், என்சிசி ஆசிரியருக்கும், சிவராமனுக்கும் என்ன தொடர்பு? சிவராமனால் ஆசிரியருக்கு என்ன லாபம்? எந்த அடிப்படையில் தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்த அனுமதிக்கப்பட்டது?” என்று கேள்விகளை எழுப்பினர்.

இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

“சினிமாவில் இடைவேளை தேவையா?”: இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!

ஆதார் கார்டு புதுப்பித்தல்…தேதி நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share