பிள்ளைகள் சிறுவயது முதலே சிறப்பாகப் படிக்க வேண்டும், முதல் ரேங்க் வாங்க வேண்டும்,ஆங்கிலம் பேச வேண்டும் என்பதெல்லாம் பெரும்பாலான பெற்றோர்களின் கனவு.
இப்படி நினைக்கும் பெற்றோர்கள், தாங்கள் கஷ்டப்பட்டாலும் லட்சங்களைக் கொட்டி தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுவார்கள்,
ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை அங்கன்வாடியில் சேர்த்துவிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகச் சரயு பணியாற்றி வருகிறார். இவரது மகள் மிலி. இரண்டரை வயதாகிறது.
வழக்கம் போல் இன்று (நவம்பர் 7) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றார் ஆட்சியர் சரயு.
தொடர்ந்து காவேரிப்பட்டின அரசு சுகாதார நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்துக்கும் சென்றார். அங்கு ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப்பதிவு எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்தார்.
பின்னர் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்யக் குழந்தைகள் சாப்பிடும் அறைக்குச் சென்றார். அங்குக் குழந்தைகள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அங்குத் தனது குழந்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து ரசித்த ஆட்சியர் சரயு, தானும் ஆசையாகக் குழந்தைக்கு உணவு ஊட்டிவிட்டார்.
அப்போது குழந்தை மிலி நானும் வருகிறேன் என அம்மாவிடம், அதாவது ஆட்சியரிடம் அடம் பிடித்தது. அங்கிருந்த பணியாளர்கள், `இரு மிலி நாம் பிறகு செல்லலாம்` என கூறியும், தொடர்ந்து அடம் பிடித்ததால் தன்னுடைய மகளை அங்கன்வாடி மையத்திலிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ஆட்சியர் சரயு.
இந்த சம்பவம் அங்கு வந்திருந்த அதிகாரிகள்,மற்றும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளிகளும் தரமான பள்ளிகள் என்பதைப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆட்சியரின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
