பெரியார் குறித்து சர்ச்சை… சீமானுக்கு சிக்கல்!

Published On:

| By Selvam

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுக்கையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஜனவரி 22-ஆம் தேதி சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியாரை இழிவுபடுத்தி கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்கு ஆதாரம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் பதிவான போதும் ஆதாரம் கொடுக்காமல் தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

ADVERTISEMENT

தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய பெரியாரை சீமான் இழிவுபடுத்துகிற செயல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மன வேதனையையும், கொந்தளிப்பையும் உண்டாக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்த பின்னரும் பெரியார் பற்றி அவதூறு பரப்புவதை சீமான் நிறுத்திக் கொள்ளாத காரணத்தால், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற ஜனவரி 22 புதன்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை நீலங்கரையில் உள்ள சீமானின் வீட்டை ஆயிரக்கணக்கானோர் திரண்டு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

எனவே பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இயக்கங்களும், தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார் பற்றாளர்களும், தமிழின உணர்வாளர்களும் அவசர அழைப்பாக ஏற்றுக்கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சென்னை சங்கமம்… கிராமியக்‌ கலைஞர்களுக்கு ஸ்டாலின் குட் நியூஸ்!

ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப  சிறப்பு ரயில்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share