கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி போக்சோ நீதிமன்றம் நேற்று (ஜூலை 18) உத்தரவிட்டது. kovai girl gang rape case… 7 people sentenced to life imprisonment!
கடந்த 2019ஆம் ஆண்டு கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூங்காவில் பிளஸ் 1 படித்து கொண்டிருந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பிறந்தநாள் கொண்டாடச் சென்றார். இரவு 9 மணியளவில் அவர்கள் வீடு திரும்பத் தயாராகும்போது, கருப்பராயன் கோயில் அருகே 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.
மாணவியின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, 16 வயது சிறுமியை கடத்திச் சென்று அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், அடைத்து வைத்தல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28) மற்றும் ராகுல் (21) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவுற்று நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி பகவதியம்மாள், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் மூன்று குற்றவாளிகளான மணிகண்டன், கார்த்தி, ஆட்டோ மணிகண்டன் ஆகிய மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அடுத்த நான்கு குற்றவாளிகளான ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து போக்சோ வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், கோவை நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு வரவேற்பு பெற்றுள்ளது.
