பணிமாறுதல் கோரி 6 மாத குழந்தையுடன் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனை, அவர் விருப்பப்படி பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் சுங்கம் கிளை-1அரசு போக்குவரத்து கழக பணிமனையில், போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பணி புரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட ஓய்வறையை துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (ஆகஸ்ட் 16) திறந்து வைத்தார்.
அரசு போக்குவரத்து பணிமனையில் பணிகாலத்தில் இறந்த பணியாளர்கள் வாரிசுகளுக்கு வாரிசு பணி ஆணைகளையும் வழங்கினார்.
அப்போது அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் திடீரென தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவரிடம், ‘எழுந்திருப்பா, குழந்தையை பிடி… என்ன பிரச்சினை சொல்லு’ என்று அமைச்சர் விசாரிக்க, “என்னுடைய மனைவி இறந்துவிட்டார். கைக்குழந்தையுடன் கோவையில் கஷ்டப்படுகிறேன். என்னை எனது சொந்த ஊரான தேனிக்கு மாற்ற வேண்டும். அங்கு வயதான எனது பெற்றோர் எனது குழந்தையை பார்த்துக்கொள்வார்கள்’ என கோரிக்கை மனுவை கொடுத்தார்.
இதனிடையே குழந்தையை அமைச்சர் காலில் போட்டதும் மேயர் கல்பனா உடனடியாக தூக்கி, அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்தினார்.
அமைச்சரிடம் ஓட்டுநர் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கண்ணன் கூறுகையில், “நான் கோவை போக்குவரத்தில் 9 வருடமாக வேலை செய்கிறேன். கோவை – திருப்பூர் பேருந்தை ஓட்டுகிறேன். மனைவி குழந்தையுடன் கோவையில் வசித்து வந்தேன்.
எனது பெரிய பிள்ளைக்கு 6 வருடம் ஆகிறது. சின்ன பொண்ணுக்கு 6 மாதம் தான் ஆகிறது. எனது மனைவிக்கு தலைவலி என்று மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சொன்னார்கள்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதே 5 ஆவது நாள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மாற்றினோம். அங்கே அனுமதித்த 2 மணி நேரத்தில் மனைவி இறந்துவிட்டார்.
இப்போது நான் வேலைக்கு வந்துவிட்டால் எனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள யாருமே இல்லை. என்னுடைய சொந்த ஊர் தேனி. அம்மா அப்பா அங்கிருக்கிறார்கள். எனவே குழந்தையை அங்கு சென்று விட்டுவிட்டேன்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி எனது பெரிய மகள். ‘அம்மாவும் போய்டுச்சு, நீயும் 5 நாள், 10 நாளைக்கு ஒரு முறைதான் வந்து பாக்குற. எனக்கு கஷ்டமா இருக்கு. அம்மா போன இடத்துக்கே நானும் போறேன்’ என அழுதாள்.
அதனால் பணியிட மாறுதலில் தேனி சென்றுவிட்டால் என் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வேன், வயதான என அப்பா அம்மாவையும் பார்த்துக்கொள்வேன். எனவே போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு கொடுத்தேன்.
இதற்கு முன்னதாக பிள்ளைகளோடு, பொது மேலாளரிடம் மனு கொடுத்தேன். அவர் தேனியில் கிராமத்தில் எதுக்கு இருக்கிறீர்கள். கோவையில் எல்லா வசதியும் இருக்கிறது. அம்மா அப்பாவுடன் இங்கு வந்துவிட வேண்டியதுதானே என்றார்.
வயதானவர்கள் என்பதால் அம்மா அப்பாவால் இங்கு வந்து வசிக்க முடியாது. இந்நிலையில் தான் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவர் பார்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்” என்றார்.
ஓட்டுநர் கண்ணனின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவரை தேனிக்கு மாற்றியுள்ளது.
நேற்றிரவு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட், கோவை மண்டலம், சுங்கம்-1 கிளையில் பணிபுரியும் பி.கண்ணன், ப.எண்:C29307, ஓட்டுநர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை மண்டலத்திற்கு நிரந்தர ஒருவழி மாறுதல் கோரியதற்கு, பார்வை -1 மூலம் இசைவு கோரப்பட்டது.
பார்வை-2ல், மேற்படி பணியாளரை நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில் திண்டுக்கல் மண்டல தேனி கிளைக்கு ஈர்த்துக் கொள்ள தெரிவிக்கப்பட்ட இசைவினைத் தொடர்ந்து, பணியாளரை நிரந்தர ஒருவழி மாறுதல் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், திண்டுக்கல் மண்டலத்திற்கு, வழக்கமான சட்டதிட்டங்களுக்குட்பட்டு மாறுதல் செய்து உத்தரவிடப்படுகிறது.
பொது மேலாளர், தஅபோக (கோவை) லிட், கோவை மண்டலம் மேற்படி பணியாளரை வழக்கமான சட்டதிட்டங்களுக்குட்பட்டு இக்கழகத்திலிருந்து விடுவித்து, மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், முன்பு ஆஜராக அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்” என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
Comments are closed.