கோவையில் பெண் ஓட்டுநர் என பிரபலமான ஷர்மிளா மீது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்று பிரபலமானவர் வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான ஷர்மிளா.
இவர் சமூகவலைதளங்களில் பிரபலமானதை தொடர்ந்து கடந்த ஆண்டு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும், திமுக எம்.பி கனிமொழியும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரை பணியில் இருந்து தனியார் பேருந்து நிறுவனம் நீக்கியது. இது சர்ச்சையான நிலையில், ஷர்மிளாவுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். அந்த கார் மூலம் அவர் தனியாக கால் டாக்சி ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை இயக்கியதால், காட்டூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரியின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அவர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அறிந்த ராஜேஸ்வரி, இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதை பயன்படுத்தி தன்னை வீடியோ எடுத்து ஷர்மிளா தவறான தகவல்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் தற்போது ஷர்மிளா மீது ஐபிசி 506(i), 509, 66C ஐடி சட்டத்தின் இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சாய் கிஷோருக்கு அடித்த ஜாக்பாட்: TNPL ஏல வரலாற்றில் இதுவே முதல்முறை!
கதவை சாத்தி பூட்டு போட்டுவிட்டோம்: அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் பதில்!