உரிமையாளரிடமே உதவி கேட்ட திருடன்: தர்ம அடி கொடுத்த மக்கள்!

Published On:

| By Monisha

இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு, உரிமையாளரிடமே மெக்கானிக் ஷாப் எங்கு இருக்கிறது என்று உதவி கேட்ட திருடனுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கருத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ADVERTISEMENT

மேலும், வாகனம் திருடு போனதை குறித்து போலீஸில் புகார் அளிப்பதற்காக கருத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு, குரும்பபாளையம் வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது இளைஞர் ஒருவர் திருடுபோன முருகனின் இருச்சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்து, தனது வாகனத்தை பழுது பார்க்க வேண்டும் மெக்கானிக் ஷாப் எங்கு இருக்கின்றது என்று கேட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் கோபத்தில் அந்த இளைஞரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு கூடிய போது வாகனம் திருட்டு போனது குறித்து முருகன் விளக்கினார்.

இதனை கேட்டு ஆவேசமான மக்கள், இதுபோன்றவர்களை சும்மா விடக்கூடாது என்று திருடனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கைறு போட்டு கட்டினர். தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பதும், இவர் மீது ஏற்கனவே பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 18 திருட்டு வழக்குகள் இருக்கின்றன என்பதும் தெரியவந்துள்ளது.

மோனிஷா

தொடரும் கொள்ளை சம்பவங்கள் : டிஜிபி உறவினரிடம் கைவரிசை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share